Sunday, 24 April 2011

கருங்காலியின் ஸ்பரிசத்தில் மரங்களின் ஒப்பாரி!




வெட்டிச் சாய்த்த மரங்கள் எத்தனையோ

விறகாய்ப் போனதும்...
வீட்டு உபயோகத்திற்காய் ஆனதும்
செல்லரித்துப் போனதையும் பற்றி
கவலைப்படதேயில்லை யாரும்

உன்னைமட்டும் சேர்த்துவைத்து
உயிர்கொடுத்த தச்சனெங்கே?

ஒழித்த மரங்களுக்கு ஒப்பாரி பாடஉன்னை
ஒட்டவைத்து விட்டானோ?

இழந்த மரங்களுக்கு இரங்கற்பா பாட உன்னை
இருக்கச் சொல்லிச் சென்றானோ?
இருப்பதைக் காத்திட இனி
உன்குரல் கொண்டு தடுப்பாயோ?

நானும்...
மரங்களை அல்ல -
மனிதர்களை அழித்துள்ளேன்...
என்நாடு காக்க எதிர் நாட்டு மக்களை
நூறா ஆயிரமாகணக்கில்லை

மரத்துண்டுகள் சேர்த்த தச்சன்
மனிதத் துண்டுகள் சேர்ப்பானா?

அனுப்பிவை... அங்கே ஆயிரக்கணக்கில் பிணங்களுண்டு!
ஒட்ட வைக்க குருதிப் பசை கூட உண்டு

அதிலும் ஓர் இசைக்கருவி செய்யட்டும்

சோக கீதம் பாட அல்ல
போர்ப்பறை முழங்க அல்ல

மனிதம் வளர்க்க! மீண்டும் மானுடம் தழைக்க!

-யாதுமானவள் 


(என் வேண்டுதலுக்கிணங்கி 15 நிமிடங்களில் இயற்றிய இந்த கவிதைக்கு நன்றி!)

Saturday, 23 April 2011

புனித வெள்ளி..





இன்று புனிதவெள்ளி.. சற்றே கவனமாக பார்ப்பவர்களுக்கு ஒன்று புலப்படும்.. சித்திரைத்திருநாள் மற்றும் ஈஸ்டர் ஒரே மாதத்தில்கொண்டாடப்படும் சமயம்/கலாசாரம் சார்ந்த திருவிழாக்கள். ஏதோ சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்தவை அல்ல. இதற்கு பின்னால் முன்னாளில் கணிக்கப்பட்ட நிகழ்வுகளின் நிழல்கள் புலப்படும். சற்றே தெளிவாக பார்ப்போம். 

நம்மில் பலர் 'சமயம்சார்ந்த விழிப்புணர்வில்லாமல்  பின்பற்றுகிறோம்/தூற்றுகிறோம். மதங்கள் ஏன் பிறந்தன என்பதை அறியும்பொழுதே நாத்திக மற்றும் ஆத்திகரின் குறுகிய கண்ணோட்டமும் விலகுமென்பது என் கருத்து. 

சென்ற பதிவில் கூறியது போல இயற்கைக்கு அஞ்சி மனிதன் அதை வணங்க விழைந்தான்.  இரவு-பகல்வெய்யில்-மழை, பனி என எல்லாவற்றையும் ஒருவியப்புடனே கண்டான்.  தனக்கு நிகழும் இவையெல்லாம் வானத்தில் இருந்து வரும் சமிக்ஞைகளாகவும்இவற்றை ஒரு/பல அதிசய சக்தி படைத்த மனிதனல்லாத மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு/பல ''இறை-பொருள்'' அடக்கி ஆள்கிறதென்றும் நம்பத் துவங்கினான்.   இவை அனைத்திற்கும் சூரியன் காரணகர்த்தா என்றும் தீர்மானமெடுத்தான்.  

சரி இதற்கும் புனித வெள்ளிக்கும் என்ன சம்பந்தம்கர்த்தருக்கும் சூரிய காரணகர்த்தவிற்கும் என்ன தொடர்புகாண்போம்..

சூரியன் இவைகளை தீர்மானிக்கிறது என்ற கண்ணோட்டத்துடன் பல வானியல் நிகழ்வுகளை கவனித்தான். இவ்வாறு பிறந்த முதல் அறிவியல் அணுகுமுறைமீது  துரதிஷ்ட்டவசமாக இறை சாயம் பூசப்பட்டது. சூரியன் 'இயற்கை வழிபாட்டின்' (Pagan) கருவானது. கால மாற்றங்கள் சூரியன் செய்யும் காரியமாக அறிந்த பின் சூரியனை வணங்கினால் இயற்கை சீற்றத்திலிருந்து காத்துக்கொள்ள முடியும் என்று நம்பினான். அவ்வாறே பிறந்த வழிபாட்டு/கொண்டாட்டமே வசந்த கால கொண்டாட்டங்கள்.

ஈஸ்டரும் அவ்வாறே பிறந்தது. 

குளிர்காலத்தில் பலமிழக்கும் சூரியன் திரும்ப விஸ்வரூபமெடுக்கும் நாளே புனித வெள்ளி. இயற்கை-வழிபாட்டாளர்கள் (Pagan),   யூதர்கள் ''Passover''என்று கொண்டாடும் இந்த வானியல் நிகழ்வே Easter என்னும் புனித வெள்ளி.. Easter என்ற சொல்லே East என்னும் கிழக்கை (சூரியனை) கொண்டாடும் விழா. அதாவது சூரியன் வசந்த காலத்தை தீர்மானிக்கும் சூரியனின் Vernal Equinox பிரவேசமே Easter. 

இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் இயற்கை வழிபாட்டின் பின்னணியையும் அடுத்த பதிவுகளில் விரிவாகப் பார்ப்போம்.. தொடர்ந்து படியுங்கள்.. தங்கள் கருத்துக்களையும் பதிவுசெய்யுங்கள். 

Thursday, 21 April 2011

கடவுள் வாழ்த்து!

வலைப்பதிவுகளை ஆரம்பிக்கையில் கடவுள் வாழ்த்துடன் துவங்குவோம்..

என் நட்புவட்டத்தில் பலர் ஆத்திகராக அமையப்பெற்றதால் இந்த கருத்தை மிகவும் கவனத்துடனே எடுத்துரைக்கிறேன். படித்த பிறகு தாங்கள் ஆத்திகராவோ நாத்திகராகவோ இருக்கலாம்/மாறலாம் ஆனால் என் நண்பராகவே தொடர விரும்புகிறேன்.. வாழ்த்திற்கு வருவோம்.. 

கடவுள் வாழ்த்து : இதை கேட்கும்பொழுதே இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட 'வேண்டும் முறை' என்றே தோன்றுகிறது. கடவுளை எதற்காக வாழ்த்த வேண்டும்? வாழ்துவதனாலேனும் வேண்டியது கிடைக்கும் என்ற அவா. சரி, இது மனிதன் செய்யும் பிராத்தனை இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை என்ற வாதத்தை எடுத்தாலும் இடரும். 

கடவுள் கலாசார சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு கதாபாத்திரம்!
ஆச்சரியமாக இருக்கிறதா.. இதோ சில உதாரணங்கள்..

நீலக்கண்ணனின் கோபியர்க்கூட்டத்தில் நீலக்கண்களுடன் எந்த பரங்கிப்பெண்ணும் குழலிசைக்கு அபிநயம்பிடிக்கவில்லை..

ஏசுநாதர் ஓ மதுரையே என்று அறைகூவளிடவில்லை..

முகம்மது நபி எந்த தாமரை மலர்பாதமுடைய கடவுளையும் வணங்கவில்லை..

கணபதிக்கு நாம் நூடில் நெய்வேதியமும் படைப்பதில்லை..

எகிப்திய கடவுள்கள் எந்த திரிசூலத்தையும் எந்திடவில்லை..

இந்திரன் ஹபியையும் கண்டதில்லை..

கிறிஸ்து உயிர்பெற்றெழும்போழுது யமதேவன் காட்சியளிக்கவில்லை.. 

இதுபோல உதாரணங்களை அடுக்கிச்செல்லலாம்! 

கடவுள் நாடுகளையும் கலாச்சாரங்களையும் கடக்கவில்லை.. இதில் கவணிக்கவேண்டிய அம்சமென்னவென்றால் அவ்வாறு மதங்களை நிறுவியவர்கள் பெரும்பான்மையானோர் (ஏசுவை தவிர) ''அரசர்/அரசியல்வாதிகள்''. ராமன், மோசஸ், முகம்மது நபி, புத்தன், கண்ணன் இவ்வாறு அடுக்கிச்செல்லலாம்.  பல கலாச்சாரங்களில் மனிதருக்கு அப்பாற்ப்பட்ட சக்தியை (இயற்கையை) தொழ துவங்கியது தமிழ்த்தோன்றா காலம்.. 

இப்படி இயற்கையை வியந்து அஞ்சி வணங்கிவந்த மனிதன் பின்னாளில் கடவுளின் பெயரால் பிரிந்து.. தானும் உயிர்துறந்தான் பிறரரையும் உயிர் பலி வாங்கத்துணிந்தான்.. கிடைத்த வாழ்க்கை கடவுள் அளித்த  பிச்சை என்ற எண்ணம் மறைந்து கடவுளுக்கு தான் அளிக்கும் காணிக்கையாய் முடிமுதல் உயிர் வரை துறக்க நேர்ந்ததே பரிதாபம்.. 

கடவுள் வாழ்க! மனித மூளையில் பிறந்த கடவுள் பல்லாண்டு வாழ்க!!

Thursday, 14 April 2011

சித்திரைத்திருநாள்..

காலச்சக்கரத்தின் சுழற்சி தொடர்கிறது. கர வருடம், ௫௧௧௩ ஆம் ஆண்டு, கலியுகம்..

சற்றே திரும்பிப்பார்க்கும் பொழுது மனக்கண்ணில் பதியும் சில காட்சிகள்..

வருடாவருடம் சித்திரை திருநாளன்று என் கண்களை அணைத்தபடியே பெற்றோர் துயிழெழுப்புவது வாடிக்கை.. அந்நாளில் நாங்கள் காணும் முதல் காட்சி முக்கனி, நவரத்தினம், பட்டு, மலர்கள், ஒளிரும் தீபமென அன்று காண்பவை மிகவும் பரவசமாயிருக்கும். செர்மானிய வாழ்க்கையில் இந்த சுகங்களை மிகவும் தவறவிட்டோம் என்ற எண்ணத்துடன் துயில் கலைந்தேன்..

தமிழ் மற்றும் தமிழ் காலச்சாரம் மறைந்து வரும் இந்த காலத்தில் சற்றே தமிழ் சார்ந்த தேடலுடன் துவங்கிய நாளில் ஆய்வகத்தில் நிகழ்ந்த சிறிய உரையாடலின் சாரத்தை பதிவு செய்கிறேன்.. இன்னும் இரண்டு நாட்களில் தன் செய்முறை கல்வியை நிறைவு செய்யவிருக்கும் எனது ஆய்வக மாணவன் பெயர் மானுவேல் எழுப்பிய வினா ஒன்றே என்னை இந்த பதிவை செய்ய உந்தியது. அவனுக்கு இன்றைய நாளைப்பற்றி கூறினேன்.. இன்று தமிழ் வருடப்பிறப்பு எங்களது தேசத்தில் இதை வெகு விமர்சையாக கொண்டாடவில்லையென்றாலும் எனது பால்ய பருவத்து நினைவுகள் என்னை வருடியதையும் நாங்கள் எப்படி புதிய வருடத்தை வரவேற்போம் என்பதையும் விளக்கிக்கூறினேன். புதிய வருடம் என்றான் எத்தனையாவது என்று வினவினான்.. பதில் என்னிடம் இல்லை.. சற்றே இணையத்தில் ஆராய்ந்த போது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தகவல் இது ௫௧௧௩ (அதாவது 5113 ) ஆம் ஆண்டு. இது தமிழ் ஆண்டா அல்லது இந்துமத ஆண்டா என எனக்கு பிரித்து பார்க்க முடிந்தது. கலியுகம் என்பது இந்து மத சம்பந்தமான சமாசாரம்.. இதைப்பற்றி மற்றொரு நாள் விலாவாரியாக காண்போம்.. நான் பதிவு செய்த எண்ணியது நம்மில் பலருக்கு இது எத்தனையாவது ஆண்டென்று தெரியாமலிருக்க வாய்ப்புள்ளது..

காதலர் தினத்தையும் ஆங்கில புத்தாண்டையும் நினைவுறுத்த தேவையில்லை நம் கலாசாரம் சார்ந்த பல தகவல்களை  பதிக்க நம் மூளையில் இடமில்லாதது வருத்தமான செய்தி. ஆங்கிலத்தில் எழுத தமிழில் எழுதுவதை விட பாதி கால அவகாசமே தேவைப்பட்டாலும் தமிழிலே எழுதோவோம் என்ற எண்ணத்துடன் எழுத்தை தொடர்கிறேன்.. இயன்றவரை அவகாசம் கிடைக்கும்பொழுதெல்லாம் இந்த பதிவை தொடரும் தீர்மானத்துடன் பயணிக்கிறேன்.. காலச்சக்கரம் சுழட்டும்..