கபாலி!
படம் பார்த்தேன். எப்படி இருக்கு என்று சிலர் கேட்டனர், எனக்கு பிடித்தது பிடிக்காதது இரண்டும் சொன்னேன். சிலர் என்னை ரஜினி ரசிகராக அடையாளப்படுத்தும் வண்ணம் என் கருத்துகள் இருந்ததாக சொன்னார்கள். விஸ்வரூபம் பட விவகாரம் குறித்து சொன்னபோது கமல் ரசிகராக அடையாளப்படுத்தினர். சதுரங்கவேட்டை, சூது கவ்வும், ஜிகர்தண்டா, காக்கா முட்டை, குற்றம் கடிதல் என பேசும் பொழுது என்மீது பூச நல்ல சாயம் கிடைக்காததாலோ என்னவோ விட்டு விட்டார்கள் போலும். காக்கா முட்டை, குற்றம் கடிதல் படம் பிடித்துப்போய் முகநூல் சுவர்ப்படமாக (Facebook cover picture) இட்டபோதும் அவை பற்றி பெரிதாக கண்டுகொள்ளாதவர்கள் கபாலி படம் போட்டபோது புருவமுயர்த்தி கொடுத்த பார்வை எனக்கு புரியாமலில்லை (அவர், படத்தை பார்த்த பின்பு அது பிடித்துப்போனது வேறு கதை)
ஒரு படத்தை விமர்சனம் செய்யுமளவுக்கு எனக்கு அருகதை இருக்கிறதா இல்லையா, இதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு பட்டதை சொல்ல விழைகிறேன்.. தொடரும்..
முதலில் மோசமான அம்சங்கள் (வெகுஜனப்பார்வையில்):
ரஞ்சித் தான் இந்த படத்தின் ஹீரோ மற்றும் வில்லன். நல்ல கதை எப்படி கொடுத்திருக்கிறார் என்பதை பிறகு பார்ப்போம். ஆனால், அவர் தவறாக அணுகிய விஷயங்களாக எனக்குப்பட்டதை சொல்கிறான். இரண்டாம் பாதியில் ஒரு தேடும் பயணம் இருக்கும், அந்த பகுதிக்கு அடுத்து வரும் காட்சிக்கு அழுத்தம் தர இதை இழுத்திருக்கிறார். ரொம்பவே மக்களை சலிப்படைய வைத்திருக்கிறதாக எனக்கு தோன்றியது. மற்றும் கதையின் பிற்பாதி மிகவும் கணிக்கும் வண்ணமே இருப்பதையும் தவிர்த்திருக்கலாம்.
தொடர்ந்து வரும் இடங்களில் கொஞ்சம் சிந்தித்து காட்சிகளுக்கு அழுத்தம் சேர்த்திருக்கலாம். ரஜினி எனும் ஒரு காந்தம் அனாயாசமா எதிரிகளை துவம்சம் செய்துகொண்டு அமரும்போது, அதுவும் படத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேளையில் ஏனைய படங்களில் வரும் அதிர்வுகள் இந்த படத்தில் குறைந்ததை காது கொடுத்து கேட்க முடிந்தது. சொல்லப்போனால் காது கொடுத்து தான் கேட்க முடிந்தது. அவ்வளவு சத்தத்துடனும் ஆரவாரத்துடனும் ஆரம்பித்த படம், முடியும் தருவாயில் ரஜினியை காண்பித்தும் கொண்டுவர முடியவில்லை என்றால் அங்கு ஒரு பெரும் பிரச்சனை இருக்கிறது. கபாலி, பாபா போன்ற படம் அல்ல, இங்கே நிறையவே 'வெகுஜன மந்திரம்' இருக்கிறது. இருந்து ஒரு குழம்பிப்போன (மன்னிக்கவும், அதுவே உண்மை) திரைக்கதை தான் வெளிப்பட்டது. இது எப்படி என்றால், பாதி கிணறு தாண்டியபின் கிணற்றை தாண்டிவிடுவோம் என்று கால்களால் நிற்கவும் முடியும், கைகளால் பிடிக்கவும் முடியும், ஆனால் அந்த குழப்பத்தில் வயிற்றில் வாங்கியதாக தோன்றியது. இது ரஜினிப்படமும் இல்லை ரஞ்சித் படமும் இல்லை என்ற ஒரு அனாதையாக நின்றது திரைக்கதை. கிணறு தாண்டும் உவமைக்கு ஏற்ற படம் கிடைக்கவில்லை, இதுவும் பொருந்தும்.

அந்த வேளையில், ரஞ்சித் அடக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்கள் சிந்திக்க மறுப்பதாகவும் கூறுவதும், உச்சகட்டமாக சீனர் ஒருவர் நாய் போல குலைத்து காட்டுவதும் மிகவும் பரிதாபகரமான திரைக்கதைகையாடலாக எனக்கு தோன்றியது.
இந்த உலகத்து ஏதாவது சொல்ல வருவதாக இருந்தால் ரெண்டு முறை சொல்லி பாருங்க, அதுவும் ரஜினி மாதிரி ஒரு சௌண்ட் சர்வீஸ் கிடைக்கும்போது கொஞ்சம் தெளிவா உச்சரிக்கணும், அப்போ தான் நீங்க சொல்ல வர்றது அழுத்தமா பதியும். இலைமறை காயா சொல்றத புரிஞ்சுக்கிற தலைமுறை இல்ல இது. அது ரஞ்சித்துக்கு தெரியும்னு எனக்கும் தெரியும், ஆன இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கணும். Coat ஐ வைத்து சொன்னது பிரமாதம் (அதை பின்னர் பார்ப்போம்) ஆனால் பல விதங்களில் கோட்டை விட்டுட்டார்.
மேலே கூறிய விஷயங்கள் ஒன்றும் படங்களுக்கு புதியதில்லை. உங்களுக்கு பிடித்த
ஒரு படத்தை எடுத்து அதில் சில குறை கண்டுபிடிக்க பார்த்தால் அப்படி
தெரியும். ஆனால், இவை கபாலியில் கொஞ்சம் அதிகம்.
சிறப்பம்சங்கள் :
அறிவியல் சார்ந்த நண்பர்களுக்கு இது நல்ல புரியும். Peer-review அப்படி தான் இந்த நாட்களில் இணையத்தில் உலாவும் கருத்தளிப்பாளர்கள் இருக்கின்றனர். என்னதான் நாம data போட்டாலும் குத்தம் குறையை கண்டுபிடிப்பாங்க, ஒரு பெரிய ஆள் நம்ம ஆதர்லிஸ்டில் இருந்தால் தப்பித்தோம், இங்க சீனியர் ஆதருக்கு தான் பகையே, அப்போ மனுஷகிரிப்ட் என்ன ஆகுமோ அது தான் நிலை.
அவ்வாறு அவர்கள் கருத்துக்களை பார்த்தால் படத்திற்கு படம் பயங்கர விதாசங்கள் இருக்கும். சில படங்களை அவர்கள் பாராட்டும் போது எனக்கு அது அந்த அளவிற்கு பிரமாதமெல்லாம் இல்லை என்று எனக்கு தோன்றும். பல படங்கள் நன்றாக இருந்தும் அவை காரித்துப்பப்படும். ரஜினி, கமல் ஒரு பழுத்த மரங்கள் கல்லடி பட அதிவாய்ப்பு. அதனால் அவர்கள் கருத்தை தூர வைத்துவிடவேண்டும்.
ஏனென்றால், லிங்காவில் ரஜினி தான் வயதிற்கு ஏற்ற பாத்திரங்களை நடிப்பதில்லை என்று கூறினர். கபாலி 65 வயசான, ஜெயில்பறவை. மலேசிய இந்தியவழி சமூகத்திற்க்கு வழங்கப்படும் கூலி சீனர்களுக்கு வழங்கப்படுவதைவிட குறைவாக வழங்கப்படுவதை கண்டித்து போராடி சூழ்ச்சியில் சிறை சென்று தான் மனைவி குழந்தைகள் என அனைவரையும் தொலைத்த ஒரு முதியவர். மலேசியாவில் இந்தியவம்சாவளி மக்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதை கவணிக்கவும், தமிழர் மட்டுமன்றி தென் மற்றும் வட இந்தியர், பாகிஸ்தானியர் மற்றும் சிலோன் வம்சாவளியினர் சீனர்களுக்கு மலாய் மக்களுக்கும் இணையாக நடத்தப்படுவதில்லை என்று என் நண்பர் ஒருவர் கூறியதையே நினைவிற்கு வந்தது. அதை சார்ந்த படம்.
ரஜினி :
65 வயசு, கடந்த இரண்டு படங்கள்
எதிர்பார்த்த அளவிற்கு திருப்தி அளிக்காமல் இந்த படத்தில் திரும்பிவிடவேண்டும் என்ற ஒரு அழுத்தத்தில் பெரிய இயக்குனர்களே காத்திருக்கும் நேரம் ரஞ்சித் என்ற 2 பட இயக்குனரை அவரின் போக்கிலேயே படம் முழுக்க நடிக்க சம்மதித்தார். ரஜினி தமிழர் இல்லை, தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் என்ற வெறுப்பை உமிழ்பவர்க்கு இரு விஷயங்கள். அவருக்கு சூப்பர்ஸ்டார் ஆக நீங்க ஓட்டு போட பிரியாணியோ குவாட்டரோ தரவில்லை, இது அவர் தொழில், பார்த்து ரசிக்க ஆள் இருந்தால், இருந்ததால் தான் இத்தனை வருஷமாக நடிக்க முடிந்தது. தங்கள் வெறுப்பு, எரிச்சல் புரிகிறது, அந்த பேரவையை உங்களால் மாற்ற முடியாதென்பதை நான் அறிவேன். டெண்டுல்கர் தோனி என யார் உச்சத்திற்கு சென்றாலும் வயிற்றெரிச்சலே
மிச்சம்.
சென்னை மழையில் சித்தார்த் உதவினார்
ஜில் ஜங் ஜக் என்ன ஆச்சு? அதை வாழ வைத்தீர்களானால் உங்களுக்கு செவிமடித்திருப்பேன்
. ஊதா கலர் தலையை மேல விரல் வச்சிருக்காரே இவர் படத்தை பார்த்தீங்களா, இவர் என்ன லூசா?
ரஜினி, இந்த படத்தில் மந்திரமிடவில்லை, அதற்கு ரஞ்சித் வாய்ப்பளிக்கவும் இல்லை. வானைத்தை காட்டி சொல்றான் செய்யறான் னு எந்த டையலாக்கையும் விடவில்லை. பொண்ணுன்னா என்று சொல்லி வழக்கமாக ரஜினி பெண்களை ஆண்களைவிட சற்றே குறைந்தவர் என்றமாதிரி எந்த கருத்தும் இதிலில்லை. பேத்தி வயசில் இருக்கும் எந்த பெண்ணுடனும் ஆடவில்லை. வேகமா நடக்கலை, வேகமா பேசலை ஆக மொத்தத்தில் ரஜினி கபாலியா வாழ்ந்து காட்டியிருக்கார். எந்த விதத்திலயும் கதையின் வீரியத்தை காயப்படுத்தக்கூடாதுன்னு சிறப்பா நடிச்சிருக்கார். இதை ரசிகர்கள் ரசிக்கவில்லை என்றால் திரும்ப மந்திரம் போடபோய்டுவார். ரஜினியை எப்படி வேணும்னாலும் திரையில் பார்த்தாலே போதும் என்ற வெறியர்கள் கொஞ்சம்நஞ்சமில்ல நிறையவே நம்ம மக்கள் உலகெங்குமிருக்காங்க.
தனியா ஒரு காமெடியனை வைத்து அவர் அடிவாங்க நாம் சிரிக்க படத்தை ஓட்டவில்லை. பாடல்கள் அருமையாக இருந்தும் பிண்ணனியாக தான் பயணிக்கிறது 1.5 பாடல் தான் பிரத்தியேக பாடலாக ஒலிக்கிறது. ரஜினி-ராதிகா ஆப்தே சந்திப்புகள் அழகு. முதல் பாதியில் ராதிகா ஆப்தே வீடெங்கும் நிறைந்து தன்னை வரவேற்கும் அந்த காட்சி அருமை. 2 வருஷம், 2 மாசம் 18 நாள் (படம் பார்த்தவருக்கு புரியும்), அது அழகு. நான் எப்போவோ செத்துட்டேன் அந்த வரி அதன் பின் வரும் 20 நொடிகள் என ரஜினி நடிப்பு நிறைந்து காணப்படுகிறது. இவை ரசனை சம்பந்தப்பட்ட விஷயமாகியதால் இதை சொல்லிக்கொடுத்து மக்களை பார்க்கவைக்க முடியாது. இது புரிந்தால் மக்கள் நல்ல ரசனைக்காரர்கள், புரியவில்லையா இயக்குனர் மோசம் என்று நாம சொல்லவேண்டாம்.
ஒரு பெரிய ஹீரோவை காட்ட ஒரு பலமிக்க வில்லனை காட்டவேண்டும். அதனாலே தான்
சீனரை வைத்து முயற்சித்திருக்கின்றனர். எந்திரன் (ஹிந்திக்காரர்/ரஜினியே)
வெற்றிபெற்றதற்கும், லிங்கா வில்லன் யாருன்னே சொல்லத்தெரியாம போனதற்கும்,
எந்திரன் 2.0 (ஹிந்திக்காரர்) போல இந்த படத்தில் சீனர். அப்போ இரண்டு
படங்களில் அன்னியகிரக வாசிகளை தான் நாம் எதிர்பார்க்கவேண்டுமோ? ரகுவரன்,
ரம்யா கிருஷ்ணன், வடிவுக்கரசி என்று தமிழில் நல்லாவே ஆளைத்தேர்வு செய்ய
இயலும் என்றும் கூறும் ஒரு சிலருக்கு கதையை கொஞ்சம் உள்வாங்க சொல்கிறேன். மலேசியா மண்ணில் இந்தியவழி மக்கள் வேலை செய்யலாம் ஆனால் ஒரு சடையன் (சீனர்) அல்லது மலாய் மட்டுமே முதலாளியா இருக்க முடியும் என்ற நிலையை சொல்லும்போது, தமிழ் பட வில்லனை கண்ணை இடுக்கி (பழைய படங்களில் பறங்கியரை காட்டியதை போல) நடிக்க சொல்லும் அவசியம் இந்த காலத்தில் இல்லை.

இந்த படம் ரஜினிபடமாகவும் இல்லை ரஞ்சித் படமாகவும் இல்லை. ஆனால் கண்டிப்பா அருமையான பல இடங்களில் கைத்தட்டலாம். 'ஆண்ட பரம்பரை இல்லை ஆளப்பிறந்தவன்', 'கோட்டு சூட்டு போடதன்னா போடுவேன்டா!' 'நீ செத்துட்டான்ன்னு நினைச்சேன் - செத்து தான் போய் இருந்தேன் நீ வர்ற வரைக்கும்' என வசங்கங்களில் கூர்மை, வருடல் எல்லாம் ரொம்பவே அதிகம், அருமை.
சமூக வலைத்தளங்களில் காரி துப்பும் அளவுக்கு படம் மோசமில்லை, ரஜினி ரசிகனாக போனால் ரசிக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு ஒரு அமைதியான படமில்லை (முதல் 15 நிமிஷம் விசில் அடிச்சுட்டு அப்புறம் படத்தை பார்க்க வேண்டும். அவ்வளவு தான் பண்ணனும் அவ்வளவு பண்ணா தான் படத்தை ரசிக்க முடியும்.
பாஷா போல ஹீரோயிசம் வேணும்னா யுடியூப்ல பார்த்துக்கோங்க. படம் வேகமா வேணும்னா ஹரி, பேரரசு படங்களை பாருங்க, ரொம்ப எதார்த்தமா வேணும்னா போய் மெட்ராஸ் பாருங்க இது ரஜினியை வச்சு நான் எடுக்கற படம். ரஜினி வாய்ஸ்ல ஒடுக்குமுறைக்கு எதிரா ஒரு குரல், ரஜினி கண்களில் விரஹம், காதல், கோபம் கணிவு எல்லாம் காட்டணும். இது தான் நான் நினைச்சன் செய்ஞ்சுட்டேன் என்று ரஞ்சித் டபுள் ஆக்ஷ்ன் பண்ணி இருக்கார்.
இது பார்க்கவேண்டிய படமா இல்லையானு உங்களுக்கே விட்டுடறேன், பார்க்கக்கூடிய படம். பார்த்தவன், பார்த்தவர்களின் கருத்தை இங்கே பகிர்ந்திருக்கிறேன். #மகிழ்ச்சி