Sunday, 31 July 2016

மூளை இழந்த செல்(வங்)கள்

அகஸ்டே கூறிய அந்த வாக்கியம் அர்த்தமுள்ள ஒன்று. பொதுவாக, இது ஒரு வயதுசார் நோய் 65 வயதிற்கு மேல் 10% இந்த நோய் தாக்க வாய்ப்புகள் உண்டு, 85% மேல் மூன்றில் ஒருவருக்கு இந்த நோயினால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதாரண மறதியிலிருந்து அல்ஸைமர் பல கோணங்களில் வித்தியாசமான, கொடூரமான ஒன்று. நாள்தோறும் செய்யும் செயலை பாதிக்கும்விதமாக ஞாபாகப்பிறழல் இருப்பின் அது அல்ஸைமர் நோய் அல்லது மற்றவிதமான ஞாபகமறதியாக இருக்கலாம். அல்ஸைமர் நோயைப்பொறுத்தவரை அது மூளையின் செயல்திறமை, ஞாபகம், சிந்தனைத்திறன் ஆகியவற்றை பாதிக்கும் ஒரு கொடிய நோய். இந்நோய் வருமுன் தெரியும் அறிகுறிகள் சிலவற்றை இங்கே கூறுகிறேன். நோய்வாய்ப்படுபவர்களுக்கு சில அறிகுறிகளும் அதன் வீரியமும் வேறுபாடும். மருத்துவர் தான் இதனை கணித்துக் கூற முடியும். 
  • அன்றாட பழக்கவழக்கங்களை மாற்றுமளவு, ஒருவர் கற்றறிந்த விஷயங்களை செல்படுத்துவதில் சிரமம் உள்பட இந்த ஞாபகமறதி சற்றே சிரமமான ஒன்றாக இருக்கும். சகஜமாக ஞாபகம் வரும் நாட்கிழமைகளில் இருந்து,  பிறந்தநாள் உள்பட சில முக்கியநிகழ்வுகளை மறந்துவிடுவர்.  
  • எண்களைக்கொண்ட சில வேலைகளை திட்டமிடல், கணக்கிடுதல், இவற்றில் பெருமளவு பிரச்சனைகள்.
  • தினம்தினம் பயன்பதுத்தும் பாதைகளைக்கூட மறந்துவிடுவர். 
  • தேதி, இருக்கும் இடம், வருடம்கூட மறந்துவிடுவர். 
  • வார்த்தைகளை பிரயோகிப்பதிலும் எழுதுவதிலும் முகுந்த பிரயத்தனப்படுவர். 
  •  வண்டிஓட்டுவது, படிப்பது, தூரத்தை கணிப்பது என்பதெல்லாம் பிரச்சனையாயிருக்கும்.
  • பாதைமறந்துவிடுவார், சகஜமாக மக்களிடம் பழகுவதிலிருந்து ஒதுங்கிவிடுவர்.
  •  படிப்படியே அவர்களது குணநலன்களிலும் மிகுந்த வேறுபாடுகள் தோன்றும்.
ஒரு பெரிய நிறுவனத்தின் மேலாளராக சுழன்றுசுழன்று வேலைசெய்துபார்த்துவந்த ஒருவர் ஒரு சிறுகுழந்தையாய்தன் அன்றாட செயல்களை செய்வதில்கூட பிறரை நாடி வாழவேண்டிய ஒரு அவலநிலையில் வாழநேரிடும். வண்டியோட்ட முடியாது, ஒரு அறையிலிருந்து அடுத்த அறைக்கு செல்வர், சென்றதற்கான காரணம் மறந்துவிடும், ஒரு குழம்பிய மனநிலையிலே வாழ்வர். இவ்வாறு அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை அவர்களால் பகிரவும் இயலாமல்போக, மற்றவர்மீது எறிந்துவிழுவர். சிலருக்கு தான்பெற்ற குழந்தையே வளர்ந்த நிலையில் அடையாளம் காணஇயலாமல்போய்விடும். ''எனக்கு ஒரு மகள் இருக்கிறாள், ஆனால் அவள் நீயல்ல, அவள் சின்னப்பெண், நீயாரென எனக்கு தெரியாது'' என்று கூறுவது ஒன்றும் விந்தையான விஷமாக இருக்காது. சிலர் பணிஓய்வடைந்ததை மறந்து காலையில் அலுவலகம் கிளம்புவர். இவர்களுக்கு மனநிலை பாதிப்பு, அதாவது பைத்தியம் என நினைத்தால் அது தவறு. அவர்களின் மூலையில் ஏற்படும் கொடூரமான நிகழ்வுகளே காரணம்.. ஆம் பல்லாயிரக்கணக்கான செல்களை இழந்து அவர்கள் மூளை ஒரு மயானபூமியாவதே அவர்களின் இந்த நிலைக்கு காரணம். 

அப்படி என்னதான் பிரச்னை என்றால் இந்த படத்தை பாருங்கள். 
மூளையின் கூறுகளில் மாற்றம்
சாதாரணமாக பாதிப்படையா மூளையக்காட்டிலும் அல்ஸைமர் நோயுற்ற மூளை மிகவும் சுருங்கிக்காணப்படும். நியூரான் எனப்படும் நரம்புசெல்கள் பலகோடி நம் மூளையிலிருக்கும், இந்த நோய்த்தாக்கியதன்விளைவாக பல செல்கள் இறந்துவிடுவதே இப்படி மூளை சுருங்கிக்கணப்படும் காரணமாகும். அகஸ்டே இறந்த பிறகு அல்ஸைமர் அவரின் மூளையில் ஆராய்ந்ததே அவரின் பெயரால் இந்த நோய் அழைக்கப்படுகிறது. இப்படி அந்த நோய் பற்றி முதலில் ஆராய்ந்து அதைப்பற்றி அறிவியல் பதிப்புகளில் பகிர்வதால் அவரின் பெயரை நோய்க்கு சூடுவதானால் 'அல்ஸைமர்-ஃபிஷர் நோய்' என்று அழைப்பதே நியாயம். யார் அந்த ஃபிஷர்? அடுத்த பதிவில் அவரை சந்திப்போம்..

Tuesday, 26 July 2016

அல்ஸைமர்-அகஸ்டே டெடர்

அலோய்சிஸ் அல்ஸைமர் இவரின் பெயரில் தான் அல்ஸைமர் நோய் என்று அழைக்கப்படுகிறது. ஜூன் மாதம் 14 ஆம் தேதி 1864 ஆம் ஆண்டு, மார்க்ட்பிரைட் என்ற ஜெர்மானிய/பவேரிய கிராமத்தில் பிறந்தார் ஆலோயிஸ் அல்ஸைமர். அஷாஃப்பன்பெர்க் என்ற ஊரில் பள்ளிப்படிப்பை முடித்தவர் பின்ன பெர்லின், ட்யூபின்கன், ஊர்ட்ஸ்பூர்க் ஆகிய இடங்களில் தனது மருத்துவப்படிப்பை தொடர்ந்தார். இறுதியாக தனது 'செவிக்குறும்பை சுரப்பி' பற்றிய மருத்துவ ஆய்வறிக்கையை 1887ல் சமர்ப்பித்தார். பின்னர் 1888ல் ஃபிரான்க்புர்ட் நகரில் ''மனநலம் மற்றும் வலிப்பு நகராட்சி மருத்துவமனையில்" இளைய மருத்துவரிடம் உதவியாளராக பணியாற்றினார். இங்கே மனித மூளை பற்றிய ஆய்வில் அவருக்கு ஆர்வம் வரத்துவங்கியது. 1895ல் மூத்தமருத்துவராக பதவிஉயர்வு பெற்று, 1902ல் அவர் எமில் க்ரேப்பெலின் என்பவரது தலைமையில் ஹைடல்பெர்க் நகரில் சிறிதுகாலம் பணியாற்றி பின்னர் அவர்கள் குழுவாக ம்யூன்ஷென் (ம்யூனிக்) நகரத்தில் பணியாற்றினர். ம்யூன்ஷெனில் மூலக்கூறுவியல் அவைக்கூடத்தலைவரானார் அல்ஸைமர். 1904ல் தனது ஹாபிலிடேஷன் (லத்தீன் : 'ஹாபிலிஸ்' என்ற வார்த்தையிலிருந்து வந்த சொல் ''பொருத்தம், சரியான, திறமையான'' என்று பொருள்படும் முது-முனைவர் தகுதி) பெற்றார். 

இதனிடையே, அல்ஸைமர் என்ற பெயரை உலகமுழுவதும் அறியவைக்கப்போகும் 'அகஸ்டே டெடர்' என்ற பெண்மணி நவம்பர் 25, 1901ல் ஃபிரான்க்புர்ட் நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், அல்ஸைமர் அவரை மருத்துவசோதனை செய்கிறார். பணியிடமாற்றம் செய்தாலும் அல்ஸைமர் அகஸ்டே டெடர் நிலைகுறித்து தொடர்ந்து கவனித்துவந்தார், அகஸ்டே இறக்கும்வரை (8 ஏப்ரல் 1906), பின்னர் அவரின் மூளையை ஆய்விற்குட்ப்படுத்தி நோய்க்கான காரணத்தை கண்டறிய முனைந்தார். யார் அவர்.. அவருக்கு என்ன பிரச்சனை?
அகஸ்டே டெடர் 1902, ஃபிரான்க்புர்ட்
அல்ஸைமர் அகஸ்டே டெடர் பற்றி எழுதிய குறிப்புகள் இன்றும் பத்திரமாக உள்ளன. முதலில் அவர் எடுத்த குறிப்புகள் நவம்பர் 26, 1901,  அதைற்தொடர்ந்து 28, 29, 30 வரை கையெழுத்து பிரதியை இருக்கிறது அந்த கோப்பு. இன்றளவும் மருத்துவர்கள் ஒருவருக்கு அல்ஸைமர் நோய்தாக்கியுள்ளதா என்றறிய கேட்கப்படும் கேள்விகளும் அவர் அன்று கேட்டதே என்றால் நம்பமுடிகிறதா? அந்த கோப்பில் இப்படி தான் இருக்கிறது, நம் வசதிக்காக அதை மொழிமாற்றம் செய்து இங்கே உங்கள் பார்வைக்கு:

நவம்பர் 26, 1901
அகஸ்டே டி (அகஸ்டே டெடர் ஐ இப்படி தான் எழுதி வைக்கிறார்), தன படுக்கையின்மேல் நிலைக்குத்திய பார்வையுடன் அமர்ந்திருக்கிறார்.

அல்ஸைமர்                                        அகஸ்டே டெடர்
உங்கள் பெயர் என்ன?                    -- அகஸ்டே 
குடும்பப்பெயர்?                               -- அகஸ்டே 
தங்கள் கணவர் பெயர்?                  -- அகஸ்டே, என்று தான் நினைக்கிறேன் 
உங்கள் கணவர்?                            -- ஓ ஹோ.. (ஒன்றும் புரியாதவர் போல விழிக்கிறார்)
தங்கள் வயது?                                --  51 
நீங்கள் எங்கே வசிக்கிறீர்களா?     -- ஓஹ், நீங்க எங்களோட ஏற்கனவே இருக்கீங்களா 
உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா? --  ஆஹ், எனக்கு ஒரே குழப்பமா இருக்கு 
நீங்க இங்கே எப்படி(வந்தீர்கள்)?    -- இங்கே, எல்லா இடத்திலும், இப்போ, இங்கே. 
                                                            என்னை தப்பா நினைக்காதீங்க.
எவ்வளவு நானா இங்க இருக்கீங்க ? -- (யோசிக்கிறார்) 3 வாரங்களாய் 
இது என்ன (பென்சில் காண்பித்தேன்) --  ஒரு பேனா 
பின்னர் ஒரு பர்ஸ், சாவி, நாட்குறிப்பு, சுருட்டு என எல்லாவற்றையும் தெளிவாய் சுட்டிக்காட்டினார். 
மதியஉணவிற்கு காளிஃப்ளவர் மற்றும் பன்றிக்கறி சாப்பிடுகிறார், கேட்டதற்கு பசலைக்கீரை என்கிறார். 

இப்படி இவர்களுக்கிடையே கேள்வி பதில்களை குறிப்பெடுக்கிறார். அதில் அகஸ்டே டெடர் கூறிய ஒரு வாக்கியம் மிகவும் பிரசித்தம், அல்ஸைமர் நோயை உணர்த்தும் ஒரு வாக்கியமாகவே தென்படுகிறது.
''Ich habe mich sozusagen verloren'' ''சொல்லவேண்டுமென்றால், நான் என்னை இழந்துவிட்டேன்''


தொடரும்..

அல்ஸைமர் (Pilot a.k.a ஐன்ஷ்டைன் சுழி)

''Du hast nicht wirklich etwas verstanden, solange Du nicht in der Lage bist, es Deiner Großmutter zu erklären.''- Albert Einstein

ஆல்பர்ட் ஐன்ஷ்டைனை  மேற்கொள் காட்டி இந்தப்பதிவை ஆரம்பிப்பதே சிறந்தது என்று தோன்றியது. மேலே சொல்லப்பட்டது ஜேர்மன் மொழியில் அவர் சொன்ன அதே வார்த்தைகளுடன். ''உன் பாட்டிக்கு புரியும் வன்னம் உன்னால் ஒரு விஷயத்தை சொல்ல இயலவில்லையெனில் உனக்கு அது விளங்கவில்லை என்று பொருள்''.


நியாஸ் அகமது என் முகநூல் நண்பரானது நவம்பர் மாத மழையின்போது, தர்மபுரியிலிருந்து சென்னைக்கு நிவாரணப்பொருள்களை எடுத்து சொல்லும் ஒரு சமூக அக்கறைகொண்ட ஒரு இளைஞனாகவே முதல் அறிமுகம். திருமணமான 10ஆவது நாள் ஜெர்மனியில் பணியைத் தொடர பனியைக் கடந்து உடலை பணியவைக்க 3 நாள் விடுப்பெடுத்தேன். மழைத்தொடர்ந்து பெய்துவர மனம்முழுவதும் தமிழகத்திலேயே இருந்தது. முகப்புத்தகத்தில் என்னால் இயன்றவரை நிவாரண உதவி செய்பவரை தொடர்புகொண்டு எங்கே எது தேவை என்பதை ஏதோ என்னால் இயன்றவரை செய்தேன். அப்போது தான் நியாஸிற்கு அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டேன், செய்யும் தொண்டை வாழ்த்தினேன். அவர் ஒரு நிருபரானது விகடனுக்கு ஒரு பெருமை என்றும் சொல்லலாம், இவருக்கு பெருமை என்றும் சொல்லலாம்.

நல்லது, விஷயத்துக்கு வருவோம். தமிழில் ஒன்றும் தெரியாமல் கிறுக்கும் எனக்கே சில தவறுகள் விகடன் இணையத்தில் தெரிந்ததை நியாஸிடம் பகிர்ந்தேன். அப்போது தான் அவரிடம் சாதாரணமாக  'பல விஷயத்த எழுதுறீங்க, அறிவியல் சார்ந்து ஏதாவது விஷயம் வேணும்னா சொல்லுங்க' என்றேன். அதற்க்கு அவர் எழுதியதை அனுப்புங்கள் என்று அவரது மின்னஞ்சல் கணக்கை பகிர்ந்தார். நானும் இது எனது பதிவுகள் இருக்கும் இடம் இந்த blog என்று பகிர்ந்தேன். அதன் பின்னரே, அடடா நாம் தான் அறிவியல் சார்ந்த எதையும் எழுத வேண்டாமென்று ஏதோ கிறுக்கிக்கொண்டிருக்கிறோமே என்று சுதாரித்துக்கொண்டு இந்த பதிவை எழுதுகிறேன். அறிவியல் அருமையான ஒரு கலையாக நான் பார்க்கிறேன். சமையல் மாதிரி தான். அறிவியலில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகள் நல்ல சமையல் செய்பவர் என்று என்னை ஜெர்மனிக்கு முதலில் அழைத்த இதயமருத்துவர் க்ளவுஸ் டீமன் ஒருமுறை அவர் வீட்டுவிருந்தின்போது கூறினார். அப்படி அறிவியல் துறையில் வேலை செய்வோர் அறிவியல் பற்றிய சினிமா/நாவல் ஆகியவற்றில் காட்டுவதைப்போன்ற பிம்பம் எல்லாம் உண்மையல்ல. எல்லாம் ஒரே குட்டையில் ஊறுகிற மட்டைகள் தான். சொல்லப்போனால் கணினித்துறையிலுப்பவர் என்ஜினியர் என்று கூறிக்கொள்வர், விஞ்ஞானரீதியான தொழிலில்/வேலையில்  இருந்தாலும் 'நான் பிஎச்டி (Ph.D) பண்ணுகிறேன்', 'நான் போஸ்ட் டாக்' என்று தான் சொல்லிக்கொள்வர். அதை அடக்கமென்று சொல்ல முடியாது, அசட்டையான பதிலாக தான் பார்க்கவேண்டும். ஓ, நானிட்ட தலைப்பு 'அல்ஸைமர்' தானே? எதற்க்காக ஐன்ஷ்டைன் பற்றி பேசினேன்? ஒரே குழப்பமா இருக்கே. மறதியா? தலைப்புக்கும் குழப்பத்திற்கும் மறதிக்கும் ஒரு பெரும் தொடர்பிருக்கு. சொல்கிறேன் பொறுமையா படிங்க.. தொடரும்..
 

Sunday, 24 July 2016

மகிழ்ச்சி!

என் முதல் பதிவில் கூறியதைப்போல தமிழில் தங்குதடையின்றி சிந்திக்க முடிந்த எனக்கு கமல் ஹாசன் குணாவில்   'அந்த வார்த்தை தான் முட்டுது' என்று கூறியதைப்போல அந்த எழுத்துக்கள் தான் முட்டியது. லதாராணி அக்கா தான் அப்பப்போ பட்டி டிங்கரிங் எல்லாம் செய்வாங்க. அவர் ஒரு புலவர் என்பதை காட்டிக்கொள்ளாமல் நான் செய்யும் திருத்தழிப்பு (அதான் கற்பழிப்பை போல எடுத்துபிழையால் கருத்தை அழிப்பது), அல்லது Mr. Kaplan என்பவர் Red என்பவர் செய்யும் கொலைகளையடுத்து 'The black list' என்ற தொலைக்காட்சி தொடரில் சிந்தவிட்ட சாட்சியங்களை அப்புறப்படுத்தி காப்பாற்றுவாரோ அப்படி, செய்வதிலிருந்து என்னை காப்பாற்றினார். பிரச்சனை என்னவென்றால், நான் சற்றே பகடியாகக்கூறுவதைப்போல எனக்கு எழுதப்படிக்க தெரியாது. இதற்கு முந்தயப்பதிவிற்கு தாங்கள் கொடுத்த வரவேற்பு என்னை மேலும் சில முயற்சிகளை செய்யதத்தூண்டியது.

மிதிவண்டின்மீது அளவிட முடியா காதல் பிறந்தாலும் இந்த வருடம் பெய்யும் பேய் மழை கபாலி (road bike, cannondale synapse) தவிர்த்து காளி (trekking bike, Bulls comp 7000) தான் ரோட்டில்விட முடிகிறது. மிதிவண்டி பற்றி வேறொரு பதிவையிடுகிறேன். பணி தவிர்த்து ஓய்வு நேரங்களில் திரைப்படமில்லா/சாரா கேளிக்கைகளை தேடுகையில் இன்று தோன்றிய பொழுதுபோக்கே இப்படி பதிவிடுவது. இதை பிரதி வாரம் செயல்படுத்தும் அவா வந்தது. அதை பற்றி வாட்ஸாப்பில் பேசுகையில் சரவணன் கூறிய இன்றைய தலைப்பு 'ஜெர்மனியில் ஒரு அயல்நாட்டானாக ஆராய்ச்சி தவிர்த்து மற்ற சில பொதுவான விஷயங்களை பகிரச்சொன்னார். சொல்ல பல இருந்தாலும், இன்று கிடைக்கும் சிறிதளவு நேரத்தில் என்ன எழுத இயலுமோ அதை செய்கிறேன்.

மொழிப்பற்று ஒரு பத்தி எழுதிமுடித்தவுடன் தான் இந்த தலைப்பை அவர் சொன்னார், நாளை அவர் அதை எதிர்பார்ப்பார் என்ற எண்ணம், இதை மட்டும் இன்று பகிர நினைக்கிறேன். ஜெர்மன் மொழி சற்றே கடினமான ஒன்று, பொருட்களுக்கு (ஹிந்தியில் உள்ளதைப்போல) ஆண்பால் பெண்பால் போட்டு பேசுவர், மற்றும் அந்த பொருளைக்குறிக்கும் 'அந்த' என்ற வார்த்தை கூட அவளாகவும், அவனாகவும், அவளால், அவனாலும் என ஒரே குழப்பமாகத்தான் இருக்கும். இங்கு வந்து 11 வருடங்களலானாலும் அந்த மொழியைகற்க்க 48 மணிநேர வகுப்புகளை மட்டுமே என்னால் எடுக்க முடிந்தது. ஆனால் ஜெர்மன்னாட்டவர் ஒருவித சுற்றுலாப்பிரியர்கள், பலவிதமான நாடுகளை/ஊர்களை பார்க்க சேமித்து அங்கே செல்வர். 3 வாரங்களுக்குமுன் தன் படிப்பை முடித்த ஒரு பெண்ணை எதுத்து என்ன செய்யபோகிறீர் என்று கேட்டதற்கு சொன்ன பதில் 'இந்தோனேசியா போகப்போகிறேன், அதற்காக 2 வருடங்களாக சேமித்துவைத்திருக்கிறேன்'. இந்த மாதிரி சுற்றுலா 3-4 வாரங்கள் செல்லும் போது பொதுவாக அந்த நாட்டின் மொழியில் சில வார்த்தைகளையாவது தெரிந்துவைத்திருப்பர். வருடாவருடம் அதே நாடு பிடித்துப்போனால் மொழியை ஒரு அளவிற்கு நன்கு கற்றுக்கொள்வர். இப்படி எல்லாம் செய்யமல் ஆங்கிலத்தை அதுவும் அரைகுறையாகவோ அல்லது திருத்தமாக பேசவிதத்திலோ நம்மவர் சிலர் வேறு மொழிகள் எனக்கெதற்கு என்று ஆங்கிலத்தை நாடியே இன்னும் வாழ்க்கையை ஓடுகிறோம். மொழி, மொழியின்மேலுள்ள ஆளுமைதான் உங்களின் அறிவுக்கூர்மையைவெளிப்படுத்த பயன்படும் என்பது நிதர்சனம். மணி 11, நாளை 1 வாரம் விடுப்புக்குப்பின் வேலைக்கு செல்லும் முதல் நாள். மீதியை நாளை தொடர்கிறேன்..

கபாலி இசை

கபாலி இசை  குறித்து முகநூலில் 12.06.2016 அன்று இட்ட பதிவு.


சந்தோஷ் நாராயணன்-ரஞ்சித்-ரஜினிகாந்த்-மலேசிய தமிழர் பின்புலம்.
சந்தோஷ் நாராயணன்- ஜிகர்தண்டா பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் என் கவனத்தை மிகவும் ஈர்த்தார். தமிழில் Ennio Morricone இசையமைத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு தரமான மிரட்டலான  பின்னணி இசையளித்தார். யாருப்பா இப்படி கலக்குரார்னு பார்த்தா, ரஹ்மான் ஒருமுறை தனக்குப்பிடித்த  தமிழ் இசையமைப்பாளர் யார் என்பதை கூறியிருந்தது ஞாபகம் வந்தது. கார்த்திக் சுப்பாராஜ் Quentin Tarantino சாயலில் ஒரு கதை சொல்ல, சந்தோஷ்  Ennio Morricone போல ஒரு இசைவிருந்தை கொடுத்தார். அருமை! இவர் இசையை சூது கவ்வும், அட்டைக்கத்தி, மெட்ராஸ், என தேடிக்கேட்டேன். கபாலி எப்படி இருக்கும் என்று காத்திருந்தேன்.. நேற்றிலிருந்து இசைகேட்டு அந்த இசையின் மயக்கத்தில், பாடல்களை கேட்டபடியே இந்தப்பதிவிடுகிறேன். நெருப்புடா! இதை தான் முதலில் கேட்க்கத்தோன்றும். மெலடி வகையை சேர்ந்த பாடல்களில் ஆர்வம் கேட்க்க கேட்க்கத்தான் மேலோங்கும். மாய நதி - அருமையான பாடல்வரிகளுடன் கேட்க்க அருமையாகவும் இதமாகவும் இருக்கிறது. பாடகரின் குரலுக்கு 'autotune' என்ற அள்ளக்கை வந்து பலர் கெடுக்கவும், அதை தவிர்த்து சந்தோஷ் இசையமைப்பதாக தோன்றுகிறது. 36 வயதினிலே 'வாடி ராசாத்தி' ஜிகர்தண்டாவில்  'கண்ணம்மா' போன்ற பாடல்களில் சந்தோஷ் பயன்படுத்தியிருக்கும் 'raw voice' அருமையாக இருக்கிறது. அதைப்போல பிரதீப் குமார் குரல் பிரமாதமாக இருக்கிறது. காணா பாலாவை வைத்து பீட்சா  'நினைக்குதே'  Jazz வகையில் ஒரு விருந்தளித்தார். கபாலியில் எனக்கு மிகவும் பிடித்தது வீர துரந்திரா! பின்னணியில் என்ன மாயம் பண்ணி இருப்பார் என்று காத்திருக்கலாம். Worth waiting.

ரஞ்சித் - மெட்ராஸ் தான் முதலில் நான் பார்த்த ரஞ்சித் படம். வடசென்னை எப்படி இருக்கும், அங்கே நடக்கும் அரசியல் என்று அருமையாக கொடுத்திருந்தார். மிகைப்படுத்தாமல் அனைவரையும் நடிக்கவைத்திருப்பார். சமீபத்தில் தான் அட்டைக்கத்தி பார்த்தேன் அதுவும் அருமை. ரஜினியை வைத்து இவர் இயக்கவிருக்கிறார் என்றவுடன் ஆர்வம் கூடியது. பாடல் வரிகளில் இவரின் சித்தாந்தங்கள் அருமை. இவர் கருத்துக்களை ரஜினிகாந்த்தை வைத்து சொல்ல இருப்பது ஆர்வத்தை தூண்டுகிறது. ரஞ்சித்துக்கு இது மூன்றாவது படமே. ரஞ்சித் படத்தில் ரஜினி. மகிழ்ச்சி!

ரஜினிகாந்த் - முல்லைப்பெரியார் பற்றி சொல்லாமல் சொன்ன படம் லிங்கா, negative publicity விநியோகஸ்தர்கள் அந்த படத்தை ஒரே நேரத்தில் பல திரையரங்கத்தில் 5 வேலை ஓட்டி லாபம் சம்பாதிக்க நினைத்து ஒரு தவறை செய்து அந்த படத்தை கொன்றனர். வீழ்ந்தது ரஜினி மந்திரம் என்று நண்டு சிண்டு ரசிகர்கூட்டம் கொக்கரிக்க. கபாலி 'teaser' வந்து புதிய பல சாதனைகளை படைத்தது. ரஞ்சித்தை தேர்வு செய்து ரஞ்சித் படமாக இது உருவாக விட்டதில் ரஜினி ஏன் இவ்வளவு ஆண்டுகளாக ஒரு வியாபார நடிகராக திகழ முடிகிறது என்பதை நிரூபித்தார். மக்கள் அவர் படங்களை பார்க்க விரும்புகின்றனர், மக்களுக்கு பிடித்தவாறு தன் படங்களை அமைக்க நினைக்கிறார். ரஜினி கூறியபடி 'கலைக்காக படம் பண்ணவில்லை, அதை கமலஹாசன் செய்கிறார், என் படங்கள் பலருக்கு வியாபாரம் செய்ய பயன்படுகிறது, இந்த வழியில் நான் போகிறேன்', அவர் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்றால், திரைப்படங்களில் நல்லது செய்யவேண்டும் என்று அவசியம் இல்லை. அவர் சம்பாதிக்கும் பணம் அவர் உழைப்பு, அந்த பணத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது அவர் விருப்பம். விருப்பம் இருந்தால் படம் பார்க்கலாம், இல்லையெனில் பார்க்கவேண்டாம். பார்க்கவர்றது தானா சேர்ந்த கூட்டம். அவர் ஒரு 'Entertainer', அதை பட்டும் பார்த்தால் சரியாய் இருக்கும். இந்த படம் பற்றிய செய்திகள் வரவேர்ப்பைப்பெற மற்றுமொரு காரணம் அவர் வயதுக்கேற்ற கதாப்பாத்திரம். இவ்வளோ வருஷம் இருந்தவருக்கு, அதுவும் புரிந்திருக்கும். அப்பவும்  70-80 களில் வந்த கபாலி - நெருப்புடா!

மலேசிய தமிழர் - பற்றி அதிகம் நாம் கவனிப்பதில்லை, அங்கே அவர் பிரச்சனைகளை சொல்லும் ஒரு தாதா கதாப்பாத்திரம், அங்கே ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சனையை ரஞ்சித் இயக்க ரஜினி நடித்து கொடுத்தால் நடக்கும் ஒரு மாய நதி கரைபுறண்டு ஓடும் கதையாக இருக்குமென்பது என் கணிப்பு. சில வாரங்கள் காத்திருப்போம்.

கபாலி!

கபாலி! 
படம் பார்த்தேன். எப்படி இருக்கு என்று சிலர் கேட்டனர், எனக்கு பிடித்தது பிடிக்காதது இரண்டும் சொன்னேன். சிலர் என்னை ரஜினி ரசிகராக அடையாளப்படுத்தும் வண்ணம் என் கருத்துகள் இருந்ததாக சொன்னார்கள். விஸ்வரூபம் பட விவகாரம் குறித்து சொன்னபோது கமல் ரசிகராக அடையாளப்படுத்தினர். சதுரங்கவேட்டை, சூது கவ்வும், ஜிகர்தண்டா, காக்கா முட்டை, குற்றம் கடிதல் என பேசும் பொழுது என்மீது பூச நல்ல சாயம் கிடைக்காததாலோ என்னவோ விட்டு விட்டார்கள் போலும். காக்கா முட்டை, குற்றம் கடிதல் படம் பிடித்துப்போய் முகநூல் சுவர்ப்படமாக (Facebook cover picture) இட்டபோதும் அவை பற்றி பெரிதாக கண்டுகொள்ளாதவர்கள் கபாலி படம் போட்டபோது புருவமுயர்த்தி கொடுத்த பார்வை எனக்கு புரியாமலில்லை (அவர், படத்தை பார்த்த பின்பு அது பிடித்துப்போனது வேறு கதை)

ஒரு படத்தை விமர்சனம் செய்யுமளவுக்கு எனக்கு அருகதை இருக்கிறதா இல்லையா, இதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு பட்டதை சொல்ல விழைகிறேன்.. தொடரும்..

முதலில் மோசமான அம்சங்கள் (வெகுஜனப்பார்வையில்):

ரஞ்சித் தான் இந்த படத்தின் ஹீரோ மற்றும் வில்லன். நல்ல கதை எப்படி கொடுத்திருக்கிறார் என்பதை பிறகு பார்ப்போம். ஆனால், அவர் தவறாக அணுகிய விஷயங்களாக எனக்குப்பட்டதை சொல்கிறான். இரண்டாம் பாதியில் ஒரு தேடும் பயணம் இருக்கும், அந்த பகுதிக்கு அடுத்து வரும் காட்சிக்கு அழுத்தம் தர இதை இழுத்திருக்கிறார். ரொம்பவே மக்களை சலிப்படைய வைத்திருக்கிறதாக எனக்கு தோன்றியது. மற்றும் கதையின் பிற்பாதி மிகவும் கணிக்கும் வண்ணமே இருப்பதையும் தவிர்த்திருக்கலாம்.

தொடர்ந்து வரும் இடங்களில் கொஞ்சம் சிந்தித்து காட்சிகளுக்கு அழுத்தம் சேர்த்திருக்கலாம். ரஜினி எனும் ஒரு காந்தம் அனாயாசமா எதிரிகளை துவம்சம் செய்துகொண்டு அமரும்போது, அதுவும் படத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேளையில் ஏனைய படங்களில் வரும் அதிர்வுகள் இந்த படத்தில் குறைந்ததை காது கொடுத்து கேட்க முடிந்தது. சொல்லப்போனால் காது கொடுத்து தான் கேட்க முடிந்தது. அவ்வளவு சத்தத்துடனும் ஆரவாரத்துடனும் ஆரம்பித்த படம், முடியும் தருவாயில் ரஜினியை காண்பித்தும் கொண்டுவர முடியவில்லை என்றால் அங்கு ஒரு பெரும் பிரச்சனை இருக்கிறது. கபாலி, பாபா போன்ற படம் அல்ல, இங்கே நிறையவே 'வெகுஜன மந்திரம்' இருக்கிறது. இருந்து ஒரு குழம்பிப்போன  (மன்னிக்கவும், அதுவே உண்மை) திரைக்கதை தான் வெளிப்பட்டது. இது எப்படி என்றால், பாதி கிணறு தாண்டியபின் கிணற்றை தாண்டிவிடுவோம் என்று கால்களால் நிற்கவும் முடியும், கைகளால் பிடிக்கவும் முடியும், ஆனால் அந்த குழப்பத்தில் வயிற்றில் வாங்கியதாக தோன்றியது. இது ரஜினிப்படமும் இல்லை ரஞ்சித் படமும் இல்லை என்ற ஒரு அனாதையாக நின்றது திரைக்கதை. கிணறு தாண்டும் உவமைக்கு ஏற்ற படம் கிடைக்கவில்லை, இதுவும் பொருந்தும்.

அந்த வேளையில், ரஞ்சித் அடக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்கள் சிந்திக்க மறுப்பதாகவும் கூறுவதும், உச்சகட்டமாக சீனர் ஒருவர் நாய் போல குலைத்து காட்டுவதும் மிகவும் பரிதாபகரமான திரைக்கதைகையாடலாக எனக்கு தோன்றியது.

இந்த உலகத்து ஏதாவது சொல்ல வருவதாக இருந்தால் ரெண்டு முறை சொல்லி பாருங்க, அதுவும் ரஜினி மாதிரி ஒரு சௌண்ட் சர்வீஸ் கிடைக்கும்போது கொஞ்சம் தெளிவா உச்சரிக்கணும், அப்போ தான் நீங்க சொல்ல வர்றது அழுத்தமா பதியும். இலைமறை காயா சொல்றத புரிஞ்சுக்கிற தலைமுறை இல்ல இது. அது ரஞ்சித்துக்கு தெரியும்னு எனக்கும் தெரியும், ஆன இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கணும். Coat ஐ வைத்து சொன்னது பிரமாதம் (அதை பின்னர் பார்ப்போம்) ஆனால் பல விதங்களில் கோட்டை விட்டுட்டார்.

  
மேலே கூறிய விஷயங்கள் ஒன்றும் படங்களுக்கு புதியதில்லை. உங்களுக்கு பிடித்த ஒரு படத்தை எடுத்து அதில் சில குறை கண்டுபிடிக்க பார்த்தால் அப்படி தெரியும். ஆனால், இவை கபாலியில் கொஞ்சம் அதிகம்.

சிறப்பம்சங்கள் :

அறிவியல் சார்ந்த நண்பர்களுக்கு இது நல்ல புரியும். Peer-review அப்படி தான் இந்த நாட்களில் இணையத்தில் உலாவும் கருத்தளிப்பாளர்கள் இருக்கின்றனர். என்னதான் நாம data போட்டாலும் குத்தம் குறையை கண்டுபிடிப்பாங்க, ஒரு பெரிய ஆள் நம்ம ஆதர்லிஸ்டில் இருந்தால் தப்பித்தோம், இங்க சீனியர் ஆதருக்கு தான் பகையே, அப்போ மனுஷகிரிப்ட் என்ன ஆகுமோ அது தான் நிலை. 


அவ்வாறு அவர்கள் கருத்துக்களை பார்த்தால் படத்திற்கு படம் பயங்கர விதாசங்கள்  இருக்கும். சில படங்களை அவர்கள் பாராட்டும் போது எனக்கு அது அந்த அளவிற்கு பிரமாதமெல்லாம் இல்லை என்று எனக்கு தோன்றும். பல படங்கள் நன்றாக இருந்தும் அவை காரித்துப்பப்படும். ரஜினி, கமல் ஒரு பழுத்த மரங்கள் கல்லடி பட அதிவாய்ப்பு. அதனால் அவர்கள் கருத்தை தூர வைத்துவிடவேண்டும்.

ஏனென்றால், லிங்காவில் ரஜினி தான் வயதிற்கு ஏற்ற பாத்திரங்களை நடிப்பதில்லை என்று கூறினர். கபாலி 65 வயசான, ஜெயில்பறவை. மலேசிய இந்தியவழி சமூகத்திற்க்கு வழங்கப்படும் கூலி சீனர்களுக்கு வழங்கப்படுவதைவிட குறைவாக வழங்கப்படுவதை கண்டித்து போராடி சூழ்ச்சியில் சிறை சென்று தான் மனைவி குழந்தைகள் என அனைவரையும் தொலைத்த ஒரு முதியவர். மலேசியாவில் இந்தியவம்சாவளி மக்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதை கவணிக்கவும், தமிழர் மட்டுமன்றி தென் மற்றும் வட இந்தியர், பாகிஸ்தானியர் மற்றும் சிலோன் வம்சாவளியினர் சீனர்களுக்கு மலாய் மக்களுக்கும் இணையாக நடத்தப்படுவதில்லை என்று என் நண்பர் ஒருவர் கூறியதையே நினைவிற்கு வந்தது. அதை சார்ந்த படம்.

ரஜினி :
65 வயசு, கடந்த இரண்டு படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு திருப்தி அளிக்காமல் இந்த படத்தில் திரும்பிவிடவேண்டும் என்ற ஒரு அழுத்தத்தில் பெரிய இயக்குனர்களே காத்திருக்கும் நேரம் ரஞ்சித் என்ற 2 பட இயக்குனரை அவரின் போக்கிலேயே படம் முழுக்க நடிக்க சம்மதித்தார். ரஜினி தமிழர் இல்லை, தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் என்ற வெறுப்பை உமிழ்பவர்க்கு இரு விஷயங்கள். அவருக்கு சூப்பர்ஸ்டார் ஆக நீங்க ஓட்டு போட பிரியாணியோ குவாட்டரோ தரவில்லை, இது அவர் தொழில், பார்த்து ரசிக்க ஆள் இருந்தால், இருந்ததால் தான் இத்தனை வருஷமாக நடிக்க முடிந்தது. தங்கள் வெறுப்பு, எரிச்சல் புரிகிறது, அந்த பேரவையை உங்களால் மாற்ற முடியாதென்பதை நான் அறிவேன். டெண்டுல்கர் தோனி என யார் உச்சத்திற்கு சென்றாலும் வயிற்றெரிச்சலே மிச்சம். சென்னை மழையில் சித்தார்த் உதவினார் ஜில் ஜங் ஜக் என்ன ஆச்சு? அதை வாழ வைத்தீர்களானால் உங்களுக்கு செவிமடித்திருப்பேன். ஊதா கலர் தலையை மேல விரல் வச்சிருக்காரே இவர் படத்தை பார்த்தீங்களா, இவர் என்ன லூசா?



ரஜினி, இந்த படத்தில் மந்திரமிடவில்லை, அதற்கு ரஞ்சித் வாய்ப்பளிக்கவும் இல்லை. வானைத்தை காட்டி சொல்றான் செய்யறான் னு எந்த டையலாக்கையும் விடவில்லை. பொண்ணுன்னா என்று சொல்லி வழக்கமாக ரஜினி பெண்களை ஆண்களைவிட சற்றே குறைந்தவர் என்றமாதிரி எந்த கருத்தும் இதிலில்லை. பேத்தி வயசில் இருக்கும் எந்த பெண்ணுடனும் ஆடவில்லை. வேகமா நடக்கலை, வேகமா பேசலை ஆக மொத்தத்தில் ரஜினி கபாலியா வாழ்ந்து காட்டியிருக்கார். எந்த விதத்திலயும் கதையின் வீரியத்தை காயப்படுத்தக்கூடாதுன்னு சிறப்பா நடிச்சிருக்கார். இதை ரசிகர்கள் ரசிக்கவில்லை என்றால் திரும்ப மந்திரம் போடபோய்டுவார். ரஜினியை எப்படி வேணும்னாலும் திரையில் பார்த்தாலே போதும் என்ற வெறியர்கள் கொஞ்சம்நஞ்சமில்ல நிறையவே நம்ம மக்கள் உலகெங்குமிருக்காங்க.

தனியா ஒரு காமெடியனை வைத்து அவர் அடிவாங்க நாம் சிரிக்க படத்தை ஓட்டவில்லை. பாடல்கள் அருமையாக இருந்தும் பிண்ணனியாக தான் பயணிக்கிறது 1.5 பாடல் தான் பிரத்தியேக பாடலாக ஒலிக்கிறது. ரஜினி-ராதிகா ஆப்தே சந்திப்புகள் அழகு. முதல் பாதியில் ராதிகா ஆப்தே வீடெங்கும் நிறைந்து தன்னை வரவேற்கும் அந்த காட்சி அருமை. 2 வருஷம், 2 மாசம் 18 நாள் (படம் பார்த்தவருக்கு புரியும்), அது அழகு. நான் எப்போவோ செத்துட்டேன் அந்த வரி அதன் பின் வரும் 20 நொடிகள் என ரஜினி நடிப்பு நிறைந்து காணப்படுகிறது. இவை ரசனை சம்பந்தப்பட்ட விஷயமாகியதால் இதை சொல்லிக்கொடுத்து மக்களை பார்க்கவைக்க முடியாது. இது புரிந்தால் மக்கள் நல்ல ரசனைக்காரர்கள், புரியவில்லையா இயக்குனர் மோசம் என்று நாம சொல்லவேண்டாம்.

ஒரு பெரிய ஹீரோவை காட்ட ஒரு பலமிக்க வில்லனை காட்டவேண்டும். அதனாலே தான் சீனரை வைத்து முயற்சித்திருக்கின்றனர். எந்திரன் (ஹிந்திக்காரர்/ரஜினியே) வெற்றிபெற்றதற்கும், லிங்கா வில்லன் யாருன்னே சொல்லத்தெரியாம போனதற்கும், எந்திரன் 2.0 (ஹிந்திக்காரர்) போல இந்த படத்தில் சீனர். அப்போ  இரண்டு படங்களில் அன்னியகிரக வாசிகளை தான் நாம் எதிர்பார்க்கவேண்டுமோ? ரகுவரன், ரம்யா கிருஷ்ணன், வடிவுக்கரசி என்று தமிழில் நல்லாவே ஆளைத்தேர்வு செய்ய இயலும் என்றும் கூறும் ஒரு சிலருக்கு கதையை கொஞ்சம் உள்வாங்க சொல்கிறேன். மலேசியா மண்ணில் இந்தியவழி மக்கள் வேலை செய்யலாம் ஆனால் ஒரு சடையன் (சீனர்) அல்லது மலாய் மட்டுமே முதலாளியா இருக்க முடியும் என்ற நிலையை சொல்லும்போது, தமிழ் பட வில்லனை கண்ணை இடுக்கி (பழைய படங்களில் பறங்கியரை காட்டியதை போல) நடிக்க சொல்லும் அவசியம் இந்த காலத்தில் இல்லை.



இந்த படம் ரஜினிபடமாகவும் இல்லை ரஞ்சித் படமாகவும் இல்லை. ஆனால் கண்டிப்பா அருமையான பல இடங்களில் கைத்தட்டலாம்.  'ஆண்ட பரம்பரை இல்லை ஆளப்பிறந்தவன்', 'கோட்டு சூட்டு போடதன்னா போடுவேன்டா!' 'நீ செத்துட்டான்ன்னு நினைச்சேன் - செத்து தான் போய் இருந்தேன் நீ வர்ற வரைக்கும்' என வசங்கங்களில் கூர்மை, வருடல் எல்லாம் ரொம்பவே அதிகம், அருமை.

சமூக வலைத்தளங்களில் காரி துப்பும் அளவுக்கு படம் மோசமில்லை, ரஜினி ரசிகனாக போனால் ரசிக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு ஒரு அமைதியான படமில்லை (முதல் 15 நிமிஷம் விசில் அடிச்சுட்டு அப்புறம் படத்தை பார்க்க வேண்டும். அவ்வளவு தான் பண்ணனும் அவ்வளவு பண்ணா தான் படத்தை ரசிக்க முடியும்.

பாஷா போல ஹீரோயிசம் வேணும்னா யுடியூப்ல பார்த்துக்கோங்க. படம் வேகமா வேணும்னா ஹரி, பேரரசு படங்களை பாருங்க, ரொம்ப எதார்த்தமா வேணும்னா போய் மெட்ராஸ் பாருங்க இது ரஜினியை வச்சு நான் எடுக்கற படம். ரஜினி வாய்ஸ்ல ஒடுக்குமுறைக்கு எதிரா ஒரு குரல், ரஜினி கண்களில் விரஹம், காதல், கோபம் கணிவு எல்லாம் காட்டணும். இது தான் நான் நினைச்சன் செய்ஞ்சுட்டேன் என்று ரஞ்சித் டபுள் ஆக்ஷ்ன் பண்ணி இருக்கார்.

இது பார்க்கவேண்டிய படமா இல்லையானு உங்களுக்கே விட்டுடறேன், பார்க்கக்கூடிய படம். பார்த்தவன், பார்த்தவர்களின் கருத்தை இங்கே பகிர்ந்திருக்கிறேன். #மகிழ்ச்சி