Sunday, 23 April 2017

சைக்கிள் பயணங்கள் பாகம் V

தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாத்துறைகளிலும் எப்படி மிளிர்கிறதோ, அதே போல மிதிவண்டி கட்டமைப்களில் பல மேம்பாடுகளை காண முடியும். மிதிவண்டிகளின் வடிவமைப்பில் துவங்கி - உதிரி பாகங்கள் - உடைகள் வரை வருடாவருடம் பல மாபெரும் கண்காட்சிகள் நடப்பதும், மிதிவண்டிஓட்டுவதை ஒரு கலையாக, அறிவியலாக, வரலாற்றுடன் கூடிய ஆராய்ச்சியாகவும் பல பரிமாணங்களை விஞ்ஞான யுகம் நமக்களிக்கிறது. அதைப்பற்றி இந்த பதிவில் சிறிது விவரிக்கிறேன்.

பின் குறிப்பு: சென்ற பதிவு வரை தங்களுடன் உரையாடும் ஒரு நடையிலேயே தங்களுக்களித்தேன், அந்த பதிவுகளில் ஆழமில்லா தமிழில் எழுதியதாக இருப்பதாகவும் இன்னும் சிறிது மெருகேற்றமுடியும் என்ற எண்ணம் மேலோங்க, இதோ இந்த பதிவில் சற்றே வேறுபடுத்தியெழுத முற்றப்படுகிறேன்.

விஞ்ஞான வளர்ச்சி விண்ணுயர மிதவை பலகையை (Hoverboard) நோக்கித்தான்போகும் என்று அறிவியல்-புனைக்கதாசிரியர்கள் கணித்தனர். மிதிவண்டி, ஒரு தொன்பொருள், இன்றைய வேகத்திற்கு அதை யார் சீண்டப்போகிறார்கள் என்ற ஒரு பார்வையே சிலருக்கு இருந்தது. மறுசாராரோ, மிதிவண்டியை வேறு தளத்திற்கு இட்டுச்சென்றனர். மிதிவண்டிகளில் பல வகையுள்ளது, அது பற்றி எழுத பலவாரங்களாகும். சுருக்கமாக, நான் பயன்படுத்தும் சில கடைநிலை கருவிகளையும், என்னிடம் இருக்கும் இரண்டுவகை மிதிவண்டிகளைப்பற்றியும் எழுதவிளைகிறேன். 

சென்றபதிவில் மிதிவண்டிகளுக்கான உபரி-உடைகளை எடுத்துரைத்தேன், எந்த உடையணிந்தாலும் மிதிவண்டிதானே நம்மை துரிதப்படுத்தும்? 

காளி:
2011வாக்கில், விளையாடச்செல்ல மட்டுமே பயன்படுத்த வாங்கிய முதல் மிதிவண்டி Bulls 7000 comp (செல்லமாக காளை அல்லது கருப்பு நிறமாயிருந்ததால் இந்தியில் काली + காளை = காளி; காரணப்பெயர்), என்ற மலையேற்றம் மற்றும் வயல்வெளிச்சலையில் ஓட்டவும் உகந்த ஒரு கலவை மிதிவண்டி. ஜெர்மனியில் மிதிவண்டிகளின் விலை மிகவும் அதிகம், அதனால் புதிதாக வாங்காமல் பயன்படுத்தப்பட்ட வண்டியை வாங்க என் நம்பர் அறிவுறுத்தினார். அதன்பேரில் ஒரே மாதிரியான வண்டியை ஒருவர் €50 குறைவாக கொடுக்கிறார் என்று அவர் கூற, சரிதான் என்று இந்த மிதிவண்டியை வாங்கியது ஒரு மடத்தனமாக சில நாட்களிலேயே பட்டது. விலைகுறைப்பிற்கு பின்னே இருந்தது தேய்மானமடைந்த பாகங்களுக்கு அளிக்கப்பட தள்ளுபடி என்றுணர்த்தேன். €80 கொடுத்து பல்சக்கரங்களை மாற்றவேண்டிய கட்டாயம், ஏறிமிதிக்க முடியாது, முயன்றால் சங்கிலி கழண்டுவிடுமென்று பயத்தோடு ஓட்டவேண்டிய நிலை. இப்படி தான் பலமயில்களை கடந்தேன். எவ்வளவு வேகம், எவ்வளவு தூரம், என்ன விசை, எவ்வளவு நேரம் என்ற சிறு சிறு அம்சங்களை தேடியறிய ஆர்வமதிகம். ஆனால் ரண்டாஸ்டிக் என்ற அலைபேசியில் ஒரு பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து  வண்டி ஓட்டி முடியவதற்குள் மின்கலம் முடிந்துவிட்டது,  (புவியிடங்காட்டி பயன்படுத்திக்கொன்டே வடிவிடுவதால்), புவியிடங்காட்டி சில சமயம் தொடர்பை இழந்தது. இவ்வாறு சில பல அசௌகிரியம் ஏற்பட்டதால் இந்த கருவியை வாங்கினேன் (பார்க்க படம்).
சிக்மா மிதிவண்டிக் கணினி

இதன் தொழில்நுட்பம் எளியது,  காந்தம் பதித்த ஒரு பாகத்தை ஆரங்களில் பொருத்தி மாற்றுரு பாகம் மிதிவண்டியில் சக்கரத்தை தாங்கும் பாகத்தில் பொறுத்திவிடவேண்டும். சக்கரத்தின் அளவை வைத்து சக்கரத்தில் சுழற்சியின் விசையை கணிக்கிறது. அதுமற்றுமின்றி, சிறிய வெப்பமானியும் இருப்பதால் கூடுதல் அனுகூலம். அதன்படி நீங்கள் எவ்வளவுதூரம் பயணித்தீர், அவ்வாறு எவ்வளவு எரிபொருளை சேமித்தீர் என்று பல விவரங்களை நீங்கள் கண்காணிக்கலாம். படத்தில் உள்ளதை போல், 4400 கி.மீ, 377 லி எரிபொருள் பயன்பட்டிருக்கலாம். இந்த கருவி வாங்க மற்றோரு காரணம், குளிர்காலங்களில் அலைபேசியில் அந்த பயன்பாட்டை தொடங்க கையுறையை கழற்றிவிட்டு பிறகு இயக்கவேண்டிய நிலை. இந்த கருவி பொருத்தி சக்கரம் சுழலும்போதே ஆரம்பித்திவிடும் அதன் கணக்கை.

குளிர் மிகவும் அதிகமாகும் போது நாம் அணியத்தகுந்த உடைகளைப்பற்றி சென்ற பதிவில் கூறியது போல, மிதிவண்டிக்கு அணிவிக்கவேண்டிய ஒரு அம்சம் 'கூர்முனைகளைக்கொண்ட/ஆணிகள் பதித்த வட்டகை' (Studded tires).



படத்தில் உள்ளது போல பல அங்குலங்கள் பனி கொட்டிக்கிடக்கையில், வட்டகைகளில் நிலத்தில் உராய்வின்றி பனி தடுத்துவிடும். இவ்வாறு உராய்வு குறையக்குறைய பனி வட்டகை மத்தியிலிருக்கும் சிறு இடைவெளிகளிலும் படிந்து உறைந்து போய்விடும், அப்படியானால் சக்கரம் மணல்குழியில் சிக்கியதுபோல ஒரே இடத்தில் சிக்கிக்கொள்ளும். ஏற்றமான இடங்களில் இது அதிக உபத்திரவம் கொடுக்கும். இதை எதிர்கொள்ளவே படத்திலுக்கது போன்ற வட்டகையை பனிக்காலத்தில் பயன்படுத்துவேன்.
ஆணிகள் பதித்த வட்டகை

கபாலி:
தினமும் மிதிவண்டியில் தான் பயணம் என்றான பிறகு, வண்டியில் சில பிரச்சனைகளால் பேருந்தை நாடுவது ஒரு வித அசௌகிரயமாக, இன்னுமொரு மிதிவண்டி இருந்தால் உதவிகரமாக இருக்குமே என்று வேறொரு வண்டியை வாங்கலாம் என்று முடிவெடுத்தேன். பனி காலம் முடிந்தபிறகு, மேலையற பயன்படுத்தும் வண்டியை வாங்கலாமா அல்லது போட்டியில் வேகமாக செல்ல பயன்படுத்தப்படும் வண்டியை வாங்குவதா என்ற சிறு குழப்பமிருந்தது.

4 வித மதிவண்டிகளும் அமரும் பாங்கும்


மிதிவண்டிகள் பல வகைப்படும், சுருக்கமாக, படத்திலுள்ளது போல 4 விதமாக அமரும் பங்குகள் உண்டு. இடதுபுறம் மேலே இப்படி குறைவான வாட்டமான (Aerodynamic) இழு விசைக் கொண்டதனால் போட்டிகளில் இவ்வகை மிதிவண்டிகளை போட்டிகளில் பார்க்கலாம் Road bike என்றழைக்கப்படும். குனிந்தவாறே ஓட்டும் பங்கு எதிர்காற்றிலிருந்து காப்பாற்றும். நீண்ட வேகமான பயணத்திற்கு இது உதவும்.

வலது மேல்புறம் உள்ளது போன்ற பாங்கு சௌகரியமாக அமரும் இருக்கையும் கைப்பிடியும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் வண்ணம் இருக்கும். நீண்ட மிருதுவான பயணத்திற்கு இது உதவும்.

இடது கீழ்ப்படத்தில் உள்ளது ஆக்கிரோஷமான அதிவேகப்போட்டிகளில் பயன்படுத்தப்படும் மிதிவண்டியில் அமரும் பாங்கு. காற்று பலமாக அடித்தால், வண்டியை சாய்த்துவிடும் வாய்ப்பும் உள்ளது அவ்வளவு இலேசானது.

கீழே வலதுபுறமிருப்பது இருக்கை கைப்பிடியின் நேர்கோட்டில் அல்லது அதைவிட கீழே இருக்கும் வண்ணம் மிகவும் இலகுவான பயணத்திற்கு உதவும்.

காளி என்று அந்த மிதிவண்டிக்கு பெயரிட்டதாலும், ரஜினிகாந்த் நடித்து நான் வண்டிவாங்க எண்ணியபோது வெளிவரவிருந்த கபாலி திரைப்படம் இருண்டுமாக புதிய வண்டிக்கு கபாலி என்று பெயரிட்டேன். Road bike - Endurance வகையிலான இந்த வண்டியே என் தேவைகளை பூர்த்திசெய்யும் வண்டியாக தெரிந்தது. சுமார் 10 கிலோ எடையுள்ள இந்த வண்டி மெல்லிய வட்டகையைக் கொண்டது. பார்க்க படம்.
கபாலி

காலனிகளை மிதிவண்டியுடன் பொருத்தும் வகையில் மிதியுடன் பொருத்தும் வன்னம் காலனியில் 4 துவாரம் கொண்ட தாங்குறுப்புகளை பொருத்தி படத்திலுள்ளது போல பொருத்திக்கொள்ளலாம்.
காலனியில்


மிதியில்
 இப்படியாக உடலின் நீட்டிப்பாக மிதிவண்டியை மாற்றிக்கொள்ளலாம். வழியில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இடகங்களில் மட்டும் மிகவும் பதட்டமாக சில நாட்களிருந்தது. கால்களை மிதியிலிருந்து எடுக்க இளவில்லையென்றால் கீழே கால் ஊன்றாமல் சமநிலை மேற்கொள்ளவது கடினம். போகப்போக இந்த வகை மிதிகளும் பழகிவிடும். மலையேற்றங்களில் மிதி மீது கால்களை வைத்திருக்க சிரமமின்றி இந்த மிதிகள் பார்த்துக்கொள்ளும். அதுமற்றுமின்றி 3x8 என்று பற்சக்கரங்கள் காளியில் இருக்கும் ஆனால் இங்கே 11 ஸ்பீட் டிஸ்க் பிரேக் என வேகத்தையும் கட்டுப்பாட்டையும் நல்ல விகிதத்தில் தக்கவைக்கிறது. 60-70 கி.மீ வேகத்திலும் காற்றைக்கிழித்துக்கொண்டு செல்ல முடியும். மெல்லிய வட்டகை அதிக வேகத்தில் செல்ல பயன்படும்.

இலகுவாக அதே நேரம் மிகவும் உறுதியாகவும் இருக்கும் அலுமினியத்தால் ஆனா இந்த மிதிவண்டியை கரிம-இழை (Carbon fiber) கொண்ட இலகுவான மற்றொரு வகையும் கூட உண்டு. பொதுவாக, வண்டி மிருதுவாக ஓடவே விரும்புவர், ஆனால் Road-bike வகை மிதிவண்டிகள் விறைப்புத்தன்மை (Stiff) கொண்ட, சாலையில் இருக்கும் சிறு சிறு ஏற்ற இருக்கங்களையும், உதறல்களையும் உணரவே இந்த அமைப்பு, இதில் ஒரு இன்பம் என்று மிதிவண்டியை ரசித்து காற்றைக்கிழித்துக்கொண்டு போக என்ன ஒரு ஆனந்தம்..

Monday, 17 April 2017

சைக்கிள் பயணங்கள் பாகம் IV

ஒரு வாரம் தான் பிடித்தது, மனது சைக்கிள் மிதிப்பதை மறந்து அதில் வரும் தசை பிடிப்பு போன்ற எல்லா சமாசாரமும் இயல்பாகிவிடவே அந்த தடையை கடந்ததாக தோன்றியது. திங்களன்று மறுபடி ஒரு சிறிய தேக்கம், செவ்வாயன்று அது மறந்துவிடும் எனவே தொடர்ந்து செய்வதே சிறந்தது என்று தோன்றியது. மனதை தயார் செய்வதில் மற்றோரு பங்காக காலையில் சைக்கிளில் போவதா அல்லது பேருந்தை நாடுவதா என்ற குழப்பம் இருக்கும். இரண்டு நான் விட்டால் மறுபடி அந்த போல மூச்சுவாங்கி மலையேறுவது தொடங்கிவிடும். ஆனால் வானம் மேகமூட்டமாக இருக்கே என்று இரண்டொருநாள் சைக்கிளை விட்டுவிட மனம் தன்னால் திருப்தியடைய விடவில்லை அடியேன்.

சைக்கிள் ஓட்ட ஒருவகையில் மற்றவர் மனநிலையும் முக்கியம்:
இந்தியா போல அல்லாமல் இங்கே வானிலை மிகுந்த மாற்றத்தை கொண்டிருப்பதால் தெளிவான திட்டமிடல் தேவைப்பட்டது. மழைக்கால அங்கி ஆல்டி என்ற அங்காடியில் தள்ளுபடியில் போடுவதாக உடன்பணிபுரியும் ஒருவர் கூறினார். இந்த ஊரில் ஒரு நல்ல விஷயமென்னவென்றால் நீங்கள் சைக்கிளில் வருவதை நல்ல விஷயமாக பார்ப்பார். நம்ம ஊரில் ஏதோ பைக் வாங்க பணமில்லை அதனால் தான் சைக்கிளெடுக்கிறான் என்ற ஏளனப்பார்வை வரலாம். அல்லது ஏனப்பா இப்படி சிரமப்படுகிறாய் என்று நம்மை முட்டாளாக பார்ப்பார். மற்றும் சாலையில் பைக்கில் சென்றாலே ஓரம்கட்டிவிடும் பெரிய வண்டிகள் சைக்கிளில் போனானால் சிவலோகபதிவிக்கு போட்டியிடும் வேட்பாளராகவே நம்மை பார்ப்பர். அண்மையில் விகடனில் வந்த சைக்கிளோட்டிகள் பற்றிய செய்தியும் நடிகர் ஆர்யா ஐரோப்பாவில் ஒரு சைக்கிள் போட்டியில் பங்கேற்றதும் நம் நாட்டிலும் சைக்கிளிங் ஒரு நல்ல பொழுதுபோக்காக வரும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

ஜூலை மாதமோ என்னவோ ஆரம்பித்த அந்த பயணம் செப்டம்பர் அல்லது ஆக்டொபர் வரை பிரமாதமாக போனது. தினசரி வேலைக்கு சைக்கிள் அல்லது வண்டியெடுத்து தனுபே நதியோரமாக.. இதுவரை எழுதிவிட்டு ஆய்வகத்தில் கொஞ்சம் வேலைகளை ஆரம்பித்துவந்தேன் (ஈஸ்டர் திங்கள் விடுமுறைதான் ஆனால் செல்களை அமைலாய்டு புரதம் வைத்து செய்யவேண்டிய சில வேலைகள் வந்துவிட்டன அதான் இன்றும் வேலை), இப்போது தான் ஞாபகம் வந்தது நான் ரங்டாஸ்டிக் (Runstatic) என்ற அலைபேசி ஆப் ஐ பயன்படுத்தினேன். அதில் பார்த்தபோது தான் இந்த சைக்கிளிங் பயிற்சி ஆரம்பித்தேன் என்று கண்டறிந்தேன். பார்க்க: இணைக்கப்பட்ட படம்.
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை, 4 மணியளவில் உண்டமயகத்திலிருந்து மீள  சிறிது தூரம் சைக்கிளில் செல்வோம் என்று தான் ஆரம்பித்தேன். ஒரு சுற்று 14 கி.மீ. அதன் தொடர்ச்சியாக வாராவாரம் ஏதாவது ஒரு பெயர் தெரியாத ஊருக்கு வழிதெரியாமல் பயணம் செய்தேன். அதிகபட்சம் 66 கி.மீ ஓய்வெடுக்காமல் ஓட்டினேன்.
இப்படி ரசித்து செய்த பயிற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது குளிர்காலம். கடைசியாக 2014 ஆம் ஆண்டு சைக்கிலெடுத்தது நவம்பர் ஏழாம் தேதி. இணைக்கப்பட்ட படத்தில் வலதுபுறம் கீழே கவனித்தால் தெரியும் 7° செல்சியஸ் தான் இருந்தது. குளிர்காலத்துக்கு ஏற்ற கையுறை இல்லை என்று amazon ல் வாங்கியது கொஞ்சமும் தாங்கவில்லை. சரி அடுத்த வருடம் வசந்தம் வரட்டும் என்று காத்திருந்தேன்.


2015 வந்தது, ஏப்ரல் மாதம் ஒரு கூறுகெட்ட மாதம் சில நிமிடங்களில் வெயில் மழை சிலசமயம் பனிப்பொழிவு கூட நிகழும். அதனால் மே வரட்டும் என காத்திருந்தேன். தினமும் வரும் காலை நேரக்குழப்பம் (அதாங்க, சைக்கிளா பேருந்தா) எழுந்து காப்பி போட்டவுடன் சைக்கிளிங் துணியணிந்தவுடன் பறந்துவிடும். பேருந்து மற்றும் டிராம் வழியே பயணம் செய்ய பணிக்கு பயணசீட்டு (Job ticket) இருந்தது, வருடாந்த சீட்டு, அதை புதிப்பிக்காமல் விட்டுவிட்டேன். சிலசமயம் நிறைய வாய்ப்புகள் இருந்தால் தானே குழப்பம்? வேணும் என்ற ஒவ்வொரு பொருளாக வாங்கத்துவங்கினேன்.

உச்சி முதல் பாதம்வரை:

இந்த நாட்டில் சைக்கிள் ஓட்ட சில விதிமுறைகள் இருக்கிறது, அவற்றை வேறு பதிவில் பார்க்கலாம். ஆனால் தட்பவெட்பநிலைக்கு எப்படி தயார் செய்துகொண்டேன் என விவரிக்கிறேன்.
தலை:
ஹெல்மெட் மட்டும் போதாது குளிர்காலத்தில் அதன் கீழே Windstopper வேண்டும். மைனஸ் டிகிரி குளிரில், காது உறைந்து கீழே விழுந்துவிடுமோ என்ற அளவுக்கு காற்றில் குளிர் பன்மடங்காக தெரியும். இந்த படத்திலுள்ளது போன்றதை வாங்கினேன், கண்ணாடி அணிய சிறிதாக இரண்டு ஓட்டைகள் மற்றும் சற்றே கதகதப்பைத்தரும் இந்த ஸ்கல்கேப்/குல்லா அணிவதவசியம். Balaclavas கழுத்து பகுதியும் காக்க வாங்கினேன்.
தலைக்குல்லா
பலக்லவாஸ்


உடல்:
25 முதல் 15 டிகிரி குளிர் வரை விளையாட அணியும் ஜெர்ஸி போதும் அதன் கீழே போகும்போது உள்ளே கொஞ்சம் கம்பிளி (Fleece) வெளியே காற்றை தடுக்கும் Windstopper கொண்ட கண்ணைப்பறிக்கும் நிறங்கள் கொண்ட ஜாக்கெட்டை அணிவது உகந்தது.
ஜாக்கெட்
இப்படி பளீர் நிறங்கள் தங்களை எதிரில் வண்டியில் வருபவர் பார்வையில் தவறாமல் கவனிக்க சிறந்தது. மைனஸ் டிகிரிகளை தொட்டவுடன் உடலை கதகதப்பாக வைக்க Thermals அதிமுக்கியம்! அதேபோல கையுறையிலும் இரண்டு அடுக்காக அணியவேண்டும். விரலுக்கு மிகவும் பொருத்தமான நன்கு வளைந்துகொடுக்கும் (Stretchable) நியோப்ரின் (Neoprene) வகையிலான கையுறை சென்ற வருடம் தான் வாங்கினேன். மிகவும் நன்றாக இருக்கும், இதை அணிந்து அதன்மேல் குளிர்காலத்திற்கு என்றே இந்த மாதிரியான மற்றோரு கையுறை வேண்டும்.
நியோப்ரின்
குளிருக்கான கையுறை


 இப்படி கையுறை இல்லாமல் 2016 ஆம் ஆண்டு துவக்கத்தில் ஒருநாள் -12° இருந்தது.. வீடு திரும்புகையில் ஒருமுறை நான் பட்ட பாடே இந்த ஏற்படுகளை செய்யவைத்தது, மலையில் இருந்து கீழேவரவேண்டும். பனி கொட்டிக்கிடக்கையில்:
  •  சைக்கிளை மிகவும் மெதுவாக ஓட்ட வேண்டியிருக்கும் அல்லது சறுக்கிவிடும். 
  • மெதுவாக ஓட்டுவதால் உடல் வெப்பம் அதிகமாக தயாரிக்காது 
  • உணவருந்தி வெகுநேரம் ஆகியிருந்தால் உடல் வெப்பத்தை தக்கவைக்க வேண்டிய எரிசக்தி இருக்காது 
ஆகா மொத்தத்தில், வேகமாகவோ மெதுவாகவோ போக முடியாது.. பிரச்சனை ஆரம்பித்தது வீட்டுக்கு ஒரு கி.மீ இருக்கும்போது. உடலில் எரிசக்தி குறைந்ததை நன்கு உணர முதிந்தது சுவாசிக்கும் காற்று மிகவும் குளிராக, விரல்களை மறக்கடிக்கும் வகையில் குளிரும் இருந்தது. அதிகமாக எதிர்ப்படும் விரல்களை உஷ்ணப்படுத்த அதிக எரிசக்தியை உடல் செலுத்தி ஒரு கட்டத்தில் உடல் பலமிழத நிலை. நின்று இளைப்பாறவோ, வேகமாக செல்லவோ முடியாமால் மாபெரும் போராட்டத்தோடு கடந்த ஒரு கி.மீ என்றே சொல்லவேண்டும். வீட்டை அடைந்ததும் வெந்நீரில் கைகழுவினேன், துடைத்ததும் சிலநொடிகளில் அது ஈரமாக வெறும் குளிராகவே போய்விட போர்வைக்குள் நுழைந்து 5-10 நிமிடங்கள் கடந்த பிறகே வெளிய வந்தேன். அதனால் 2016 பனிக்காலத்திற்கு நிறைய தயாரிப்புகளோடு சென்றேன், கடந்தேன். ஜேர்மன் பழமொழி ஒன்று உண்டு 'ஒழுங்காக நீ உடுத்தினால், மோசமான தட்பவெப்பநிலை என்று ஒன்றுமில்லை'.

கால்கள்:
கைகளுக்கு எப்படியோ அப்படியே கால்களுக்கும். சாக்ஸ் (காலுறை) மட்டும் போதாது, பஞ்சிலானது உள்ளே (வியர்க்காமலிருக்க) கம்பிளியிலான ஒன்றை வெளியே அப்புறம் காலனி அதன் மேலே இப்படி ஒரு உரை.
காலனி மேலுறை 
இது தவிர ஒரு மழைக்கால அங்கி என இத்தனையும் சரியாக தேர்வு செய்தால் எந்த சீதோஷண நிலையிலும் லாவகமாக சைக்கிளோட்டலாம். ஆடைகளே இவ்வளவு இருந்தால் சைக்கிளை எப்படி தயார் செய்யவேண்டும். மற்றும் நான் வாங்கிய மற்றொரு சைக்கிளை பற்றியும் சொல்லியே ஆகவேண்டும். அடுத்த பதிவில் கூறுகிறேன்.

 சுழலும்..

Sunday, 16 April 2017

சைக்கிள் பயணங்கள் பாகம் III

தயாராதல்:
சைக்கிள் ஓட்ட என்ன பெரிய ஏற்ப்பாடு செய்யவேண்டும்? ஏறி உட்கார்ந்து மிதித்தால் போகப்போகுது, நடப்பதைவிட ஒன்றும் பெருசா தேவைப்படாதென நினைக்கத்தோன்றும். அல்லது, சைக்கிளில் டியூபில் காத்து இருக்கா, ரைட்டு; பிரேக்கு பிடிக்குதா சரி கிளம்பிடலாம். ஆனா மலைமீது? சரி கியர் இருக்கே எத்தனை கியர்? மொத்தம் 8x3 = 24, நல்லது தானே. சரி எந்த மாதிரியான சைக்கிள்? அதாங்க trekking, mountain, city, road, endurance, bmx இதுல எது நமக்கு வேணும். இந்த அளவுக்கு யோசிக்கவேணடாம். ஆனால் புல் வெட்ட கோடாரி தேவையில்லை, கத்திரி வைத்து கத்திரிக்காயை வெட்ட முடியாது என்ற சாதாரணமான விஷயஞானம் இருந்தால் போதும்.

மேலே குறிப்பிட்டது சைக்கிள் பற்றிய சந்தேகம் என்று வைத்துக்கொள்வோம், உடை பற்றியும் கொஞ்சம் கவனம் வேண்டுமே, மழை வந்தால் நனையாமலிருக்க குடையுடன் போகவேண்டாம் ஆனால் -15°C குளிரில்? பனி டயரில் சிக்கிக்கொண்டால் சக்கரம் சேற்றில் மாட்டியது போல சுழன்றுகொண்டே இருக்கும் நகராது. கையுறை அணிவது அழகுக்கு அல்ல. இப்படி சில விஷயங்களை இங்கே விவரிக்கலாமென இருக்கிறேன். மேலும் மனதளவிலும் உடலளவிலும் எவ்வாறு என்னை தயார் செய்துகொண்டேன் என்பதையும் குறிப்பிடவிருக்கிறேன்.

சுயமனோவசியம்:
சுருக்கமாக, மனதை அடிமையாக்குவது, உங்கள் மனதை நீங்களே கட்டுப்படுத்துவது. என் Badminton பயிற்சியாளர் கற்றுக்கொடுத்தபோது கூறிய முக்கியமான ஒரு வாக்கியகம் 'நல்ல shot அடிக்க 90% பலம் காலிலிருந்தே வரவேண்டும்' அதாவது பந்தை அடிக்குமுன் நீ அடிக்கவேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்து, அந்த இடத்தை அடைந்திருக்கவேண்டும் 'footwork' தான் முதலில் வரும். அந்த குறிப்பிட்ட இடத்தை நீ அடைந்துவிட்டாயென்றால் மற்றது 10% மட்டுமே. அதேபோல எனக்கு என்னில் கண்டு நிவர்த்தி செய்த விஷயம் சைக்கிள் ஓட்டுகையில் வரும் மனரீதியான விட்டுவிடலாம் என்ற போர்க்குணமின்மை. அது போர்குணமாக இருந்துவிட்டால் சீக்கிரம் தளர்ந்துவிடுவோம் என்பது வேறு கதை.

உண்மையாக அந்த முதல் சைக்கிள் அனுபவம் ஒரு சிரமமான ஒன்றாக இருந்தது. இன்னும் எவ்வளவு தூரம், இதோ வந்துவிட்டதா, வேகமாக அழுத்தி இடத்தை அடைந்துவிடலாமா, நம்முன் செல்லும் அவர்களுக்கும் இப்படி தான் சிரமமாக இருக்குமோ, நிறைய பேரிச்சம்பழம் சாப்பிட்டால் ஹீமோகுளோபின் பெருகினால் மூச்சுவாங்காதில்ல? இப்படியெல்லாம் ரொம்பவே சிந்திக்கத்தோன்றும். இப்படி தோன்றுவது ஒன்று விநோதமில்லை, ரஜினிகாந்த் மாதிரி முதல் நாளில் மிதித்தவுடனே Chris Froome ஐ தோற்கடிக்கும் வன்னம் பலமும் தெய்வ அனுகூலமும் வந்து விடுமென்பதெல்லாம் சினிமாவில் நன்றாக இருக்கும். விளையாட்டு என்பதற்கு மெனக்கெடல் என்றுமொரு அர்த்தமுள்ளது.

ஒரு வாரம் இந்த எண்ணமெல்லாம் இருந்தது. மிகவும் சிரமப்பட்டே கரட்டின் மேலே இருக்கும் என் ஆய்வகத்தை அடைந்தேன். அதன் பிறகு நான் கையாண்ட சில வழிமுறைகளை நான் உங்களுடன் பகிர்கிறேன், பயனுள்ளதாக இருக்குமென்ற நம்பிக்கையில். நான் செய்தவை 
  • மனதை வேறிடத்தில் செலுத்துதல் 
  • மூச்சில் கவனத்தை இருத்துதல் 
  • அன்றைக்கு செய்யவேண்டி காரியங்களை சிந்தித்தல் 
  • வரும்போது வரட்டும் என்று வெறுமனே பெடலிடுவது 
மனதை திசைதிருப்புவதால் அலுப்புவராது, ஏதோ பெரிய சிரமமான விஷயம் செய்கிறோம் என்று நினைக்கையில் தான் பளு அதிகமாக உணரத்தோன்றும். மூச்சில் கவனமென்பது சுலபம், வாய்வழியே மூச்சிழுத்து மூக்கின் வழியே வெளியேற்றுவது - மறுதலையாக செய்வது. அன்று என்ன செய்ய வேண்டுமோ அதையொட்டி சிந்திப்பதும் ஒரு விதத்தில் வேறிடத்தில் மனதை செலுத்துவதே ஆனால் இதை மூன்றாவதாக குறிப்பிடுவதிலும் ஒரு காரணம் இருக்கிறது. முதலில் சிரமமாக இருக்கும்போது நீங்கள் சினிமா பற்றிக்கூட யோசிக்கலாம் பாதி மலையேற்றத்தில் மனதை கூர்மைப்படுத்த இயலும் அந்த சந்தர்ப்பத்தை சரியே பயன்படுத்தவே இந்த வழி. நான்காவதாக வருவது தரும்போது விரட்டாமல் வருவது வரட்டும் என்று விடுவது. இந்த நேரத்தில் வீரியம் காட்ட முடியும், ஆனால் பயிற்சி அதற்க்கு அவசியம். சுழலும்..

சைக்கிள் பயணங்கள் பாகம் II

சைக்கிளில் மலையேற்றம் முதல் அனுபவம்:
மிதிக்க ஆரம்பித்தேன், formal துணிமணி அணிந்து, முதுகில் மணிக்கணினி, தோலிலான காலனி சகிதம் மிதக்க ஆரம்பித்தேன். நான் எதிர்கொண்ட அந்த அனுபவத்தை விவரிக்க முதலில் அது பற்றிய சில குறிப்புகள் இருந்தால் எளிமையாக இருக்கும்.

நரம்புசார் நோயியல் (Neuropathology) துறையில் அப்பொழுது பணி. எனது உயரதிகாரி, ஒரு மருத்துவர், உல்மிலிருந்து குங்ஸ்பெர்க் என்ற ஊருக்கு தினசரி பயணம் அவருக்கு. ஆய்வகம் உல்மில், அவரது நரம்புசார் நோயியல் மருத்துவ ஆய்வகம் குங்ஸ்பெர்கில். அதனால் தினசரி காலை 7:30-8:00 வரை எனது ஆய்வறையில் செய்யும் ஆராய்ச்சிகளைப்பற்றி அவருக்கு விவரித்து, அவரின் கருத்துக்களையும் வழிபடுத்தலையும் அந்த அரைமணிநேரத்தில் பேசிமுடித்துவிடவேண்டும். அவ்வாறாக நான் 7:30க்கு தயார்நிலையில் இருக்கவேண்டுமென்றால் 7:15 முதல் தேவையான ஆவணங்கள் எல்லாம் தயார்படுத்தவேண்டும். சைக்கிளில் சென்றால் காலை 7:00 மணிக்கு பணிபுரியும் கட்டடத்தின் அடித்தளத்தில் இருக்கும் குளியலறையில் குளித்துதெளித்து தயாராகி வர வேண்டும். வீட்டிலிருந்து அங்கே செல்ல 7 கி.மீ  பிடிக்கும் கால அவகாசம் 25-28 நிமிடங்கள் (ஆமாம் துல்லியமாக அலைபேசியில் கணக்கிட்ட காலநேரம்), 147 மீட்டர் உயரம். ஆகா 6:30-6:45 மணிக்கெல்லாம் பெட்டியை கட்டினால் தான் தாமதமின்றி அங்கு சென்றடைய முடியும். அதுவே டிராம் என்றால் 6:45 மணிக்கு வண்டி ஏறி ஒரு பேருந்தை பிடித்து சென்றடைய 20-30 நிமிடங்கள் பிடிக்கும் (ஒரு பேரூந்தை தவறவிட்டால் அடுத்ததுவர 10 நிமிட இடைவெளி). ஆறாம் எண் பேரூந்து ஊர் சுற்றி போய் ஒரு நிறுத்தத்திற்கு முன் நின்றுவிடும், ஏதாவது படித்துக்கொண்டே போக வசமாக இருக்கும். சைக்கிள் ஆறாம் எண் பேருந்து தடமோ மூன்றாம் தடமோ எனக்கு அப்போது தெரியாமல் போனதே பெரிய குழப்பம்.

தட்டுத்தடுமாறி ஒருவழியே பல்கலைக்கழ வழியென நம்பி போன எனக்கு ஒரு செங்குத்தான வழி கண்ணில் பட்டது. Google maps இதுதான் ராசா வழி என்று சொல்லியது சுற்றும்முற்றும் சின்ன தோட்டங்களாக தான் இருந்தது. இந்த தோட்டங்கள் நகரவாழ் மக்கள் தமக்கென குத்தகைக்கு ஊருக்கு ஒதுக்குபுறமாக எடுத்து தோட்டமிட அளிக்கப்பட்ட இடங்கள். ஆளரவமற்று இருந்த அந்த இடத்திலிருந்து எப்படியும் பல்கலைக்கழகத்தை கண்டுபிடித்துவிடலாம் என்ற எண்ணம் கொஞ்சம் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமாக தான் தோன்றியது. ஆனால், என் நண்பி இந்த வழியாகவா தினசரி வருவார்? அவர் மனுஷிதானா? என்று ஏகத்துக்கும் வியப்படைந்தேன்.

ஒருவழியே இரண்டுபேர் என் முன்னே சைக்கிளில் என்றது கண்டு இது தான் வழி என தெரியவர அவர்களை மெதுவே பின்தொடர்ந்தேன். ஒருவரோ ஆள் ஆஜானுபாகுவான உருவம் பெடலின்மீதேறி மிதித்தவன்னம் மிகவேகமாக சென்றார், எப்படியய்யா இந்த மாதிரி எல்லாம் ஓட்டுறீங்க என்று நாக்கில் நுரைதல்லாதவன்னம் ஏதோ மிகமிதவேகத்தில் சென்ற என் கால்கள் தளர்ந்ததாக நானே நினைத்துக்கொண்டேன். கால்களல்ல நுரையீரலில் தீப்பிடித்த மாதிரி ஒரு எரிச்சல், இனிமேலாகாதப்பா என்று நிறுத்தி தள்ளதுடங்கினேன். காட்டுக்குள் நடக்கும் வழியைக் கண்டேன், சாலையிலிருந்து அந்த பக்கமாக இறங்கித்தள்ளத் தொடங்கினேன். என்னருகே ஒருவர் வந்துகொண்டே கேலியாக 'என்ன சைக்கிளில் மலைப்பாதை பயணத்துக்கு புதுச?' என்று கேட்டார். ஆமாம் என்று தலையசைத்தேன், 'முதல் நாள்தான், முடியல' என்று பதிலளித்தேன். வடிவேலு பிரபுதேவாவிடம் சொல்லுவாரே 'same blood', அந்த மாதிரி சொல்லி சிரித்தார். அவர் நடந்து தான் அன்று வந்துகொண்டிருந்தார். ஆனால் எனக்கு அது தான் ஒரே அனுபவமாகும் என்று நம்பிக்கொண்டு தான் ஆய்வறையை அடைந்தேன். சில நிமிடங்களில் அப்படி ஒரு கடினமான ஒரு பாதையைக் கடந்துவந்த ஒரு சோர்வுமில்லை. அதேசமயம் உடலில் ஒரு புத்துணர்ச்சியை உணர்ந்தேன்.

சவால்களை துரத்தி சாப்பிடும் அசாதாரண ஆசாமியெல்லாம் நானில்லை. ஆனால் தினசரி நான் பேருந்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்கையில் சிலர் சைக்கிள் சகிதமாக வருவது எனக்குள் ஒரு கேள்வியை எழுப்பியது. காலை 6:45க்கெல்லாம் வேலைக்கு கிளம்பி செல்வதால் இதற்க்கு முன்பு ஆசையாய் விளையாடிய Badminton விளையாட முடியாது நிலை. அதுமற்றுமன்றி நரம்புசார் நோயியல்துறையில் இருப்பதால் இறந்தபின்னர் உடலுறுப்பு தானம் செய்பவர்களின் மூளையை கூறிட்டு பதப்படுத்துவதற்கு என் உயரதிகாரிக்கு உதவியாக எனக்கும் மாலை 5 அல்லது 6 மணியிலிருந்து சிலசமயம் 8 மணி வரை வேலை இருக்கலாம். என்றாவது நிகழும் இந்த உடற்க்கூறு ஆய்விற்கு தயாராக இருக்க  வேண்டிய நிலைவேறு. அதனால் சைக்கிளிங் ஒரு நல்ல உடற்பயிற்சியாக தோன்றியது. தயாரானேன்..

Saturday, 15 April 2017

சைக்கிள் பயணங்கள் பாகம் I

ஒரே நாளில் இரண்டாவது பதிவை எழுதுமளவு நேரம் அமையப்பெற்றதற்கு மேகங்களும் ஒரு காரணம். வசந்தகாலங்களில் தொடங்கி குளிர்காலம் தன் வீரியத்தை காட்டும்வரை நான் மிதிவண்டி (சைக்கிள்) சகிதம் ஊர் ஊராக சுற்றுவதை விரும்பி செய்யும் ஒரு பழக்கம். கடந்த 2 வருடங்களாக குளிர்காலம் வந்தாலும் அதற்க்கு சளைக்காமல் சைக்கிளில் பணிக்கு செல்வதை தொடர்ந்தேன். ஏதாவது எழுதவேண்டும் என்று தோன்றியது என்ன எழுதவேண்டும் எப்படி எழுதவேண்டும் என்று எண்ண ஆரம்பித்தால் எழுத முடியாது என்பது என் கருத்து. ஒரு வகையில் இலக்கிய இலக்கண அறிவு மிகுந்த என் நண்பர்கள் எழுத நேரம் அமையாமல் போகா இதுவும் ஒரு தடைக்கல்லாக இருக்கலாம். சரி சைக்கிள் பற்றிய இந்த பதிவை தொடர்கிறேன்.

சிறுவயதில் (ஒரு ஏழெட்டு வயதிருக்கும்) நெய்வேலியில் Hero Hansa தான் என் முதல் சைக்கிள் அனுபவம், இரண்டு சக்கரங்கள் மற்றும் சமநிலைப்படுத்தும் வன்னம் இரண்டு ('அள்ளை கால்கள்') சக்கரங்கள் என ஓட்டுவதில் ஒரு அதீத ஆர்வம். தெரியாத ஊர், மாமா வீட்டை நோக்கிச்செல்லும் சாலையை Refrigerator விளம்பரத்தை பார்த்து அடையாளமாக வைத்துக்கொண்டு மொட்டைவெய்யிலில் வெகுநேரம் ஆனந்தமாக சைக்கிள் மிதித்தேன், பசி வயிற்றைக்கிள்ள திரும்ப வீட்டைநோக்கி பயணமான பொது தான் Voltas Refrigerator ஆ அல்லது Godrej அல்லது Kelvinator ஆ என்ற குழப்பத்தில் வழிமறந்து சுற்றியதும் ஞாபகத்திலிருக்கிறது.

பின்னர், குரங்குபெடல் போட வெட்கி எட்டாம்வகுப்புவரை சைக்கிள் ஓட்டவில்லை. சைக்கிள் ஓட்ட தெரியாதானு நண்பர்கள் கேட்டபோது தெரியும் ஓட்டியிருக்கிறேன் என்று கூறிவிடுவேன். ஆனால் உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு கேள்வி இருக்கும். தாத்தாவின் பெரிய கனமான சைக்கிள் தான் வீட்டில். என் மனதுக்கு பிடித்த Hero Ranger சைக்கிள் வேண்டுமென்றால் முதல் 5 ரேங்க் எடுக்கணுமாம். என் வகுப்பில் எல்லாம் மிகவும் கடுமையான போட்டியுடைய படிப்பாளிகள் இருந்தார்கள், பேருக்கு கூட நான் முயற்சிக்கவில்லை. நான் வளர்ந்து சீட் எட்டும்போது நேராக அப்போதே ஓட்டுகிறேன் என்று சொல்லியவண்ணம் 1 வாரத்தில் ஷங்கர் என்று என்னைவிட ஒரு வயது மூத்த அண்ணனும் நானும் ஒருவுருக்கொருவர் உதவி சைக்கிள் கற்றுக்கொண்டும். அதன் பிறகு என் தம்பி அடம் பிடித்து கியர் வைத்த சைக்கிள் வாங்கிவிட்டான். கொஞ்சம் முயற்சி செய்து ஐந்தாவது ரேங்க் வாங்கி இருக்கலாம், கொஞ்சம் பிடிவாதம் பிடித்து சைக்கிள் வாங்கி இருக்கலாம், அல்லது குரங்குபெடல் போட்டிருக்கலாம். பலசமயம் என் செயலுக்கான விளக்கங்கள் தருவதில் சிரமம் இருக்கும். அப்படி என் தம்பி வாங்கிக்கொண்ட சைக்கிளை தான் பின்னர் மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தினேன்.

ஜெர்மனி வந்த பிறகு கவணித்த விஷயம் சாலையில் சைக்கிளிற்க்கென பிரத்யேக வழித்தடம், இவ்வாறாக (படத்தில் பார்க்கவும்) சிவப்புநிற வழித்தடம் மற்றும்/அல்லது சைக்கிள் குறியீட்டுப்பலகையோ இருக்கும்.


முதன்முதலில் என் நண்பரிடமிருந்து சைக்கிள் கடன்வாங்கி வாங்கி செல்லலானேன், வழக்கம்போல இடப்பக்கமாக போக அந்த சிறிய ஒதுக்குபுறமான சாலையில் எதிர்பட்டவரெல்லாம் ஒரு பெரியவர் புன்னைகையுடன் வலைப்பக்கத்தை காட்ட, அங்கே என் எதிரில் ஒரு மகிழ்வுந்து நான் கடப்பதற்காக காத்திருந்தும், தர்மசங்கடத்தில் சாலையின் வலப்புறம் சென்றேன். பல வருடங்கள் கடந்த பின்பே பயன்படுத்தப்பட்ட (second hand) சைக்கிள் வாங்கினேன், இங்கே சைக்கிள் ஊர்பட்ட விலை. நான் பணிசெய்த நிறுவனத்தில் என் உயரதிகாரி தினசரி சைக்கிளில் வருவது வியப்பாக இருந்தது. அனால் மன்ஹைம் ஒரு சமவெளி, Badminton விளையாடப்போகும்போது தினசரி நான் சைக்கிளெடுத்தேன். வயல்வெளிகளை கடக்கையில் எதிர்காற்று ரொம்பவே பதம்பார்க்கும். அப்படி சிறு சிறு பயணங்களுக்கே நான் பயன்படுத்திய சைக்கிளின் மேல் அளவுகடந்த ஈர்ப்பு வந்தது நான் உல்ம் நகரம் வந்த பிறகே.

மன்ஹைம் போலன்றி, உல்ம் கரடுகளைக்கொண்டது நான் பணிபுரியும் உல்ம் பல்கலைக்கழக மருத்துவமனையும் ஈசல்ஸ்பெர்க் என்ற கரட்டின் மேல உள்ளது. அப்படி என் பணியிடத்தில் தினசரி ஒரு பெண்மணி சைக்கிளில் வருவார். வெகுவாக வியந்து போனேன்! அப்படி ஏன் சிரமப்பட்டு வரவேண்டும் என்று வினவினேன். ரொம்ப பிடிக்கும், பழகிவிட்டது, அதுமட்டுமின்றி இப்படி தினசரி வருவதால் உடற்பயிற்சி செய்வதற்காக தனியே நேரமொதுக்க வேண்டாமே என்று சொன்னார். நம்மிடமும் சைக்கிள் இருக்கு எப்போ பயன்படுத்த போகிறேனென்று தெரியவில்லை என்று யோசித்திவிட்டு விட்டுவிட்டேன்.

ஒரு நாள், அந்த ஒரு நாள், பேருந்து மற்றும் டிராம் வண்டி (தெருத்தொடர்வுந்து) ஊழியர்கள் வேலைநிறுத்தம்செய்ய 3 மாணவிகள் என் வருகைக்காக காத்திருப்பார்களே என்று அரக்கப்பரக்க ஓடியாவது போகலாமா என்ற ஒருவேகத்தில் இருந்த பொது 7 கிலோமீட்டர் ஓடுவதைவிட சைக்கிளில் பயணிக்கலாமே என்று வீட்டிலிருந்து வண்டியெடுத்தேன். வழி தெரியாது, சைக்கிளிற்கு பிரத்தியேக வழித்தடம் எங்கே பார்ப்பதென்று யோசித்து கூகுளை நாடினேன் வீடு முதல் ஆய்வறை வரை போக GPS மூலமாக Google maps தான் துணை என்று கிளம்பினேன்.. சக்கரம் சுழலும்..



படிக்க அதிகம் வராது ஆனா எழுத பிடிக்கும்

எழுத்துக்களுக்கு வரும் விமர்சனங்கள் மகிழ்ச்சியளிக்கிறது, நீங்கள் இதை படிப்பதும் கருத்து கூறுவதும், நான் செலவழிக்கும் நேரத்தை அர்த்தமுள்ளதாக்குகிறது. ஒரு நண்பர் கூறினார், 'உன் எழுத்துக்கள் புத்தாண்டு பற்றிய எனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வைத்தது, ஆனால் இதை பற்றி மேலும் படித்துவிட்டு திரும்ப பேசலாம், அதுவரை என் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளாமல் ஒத்திவைக்கிறேன்'.

வாசகர்கள் கண்ணோட்டத்தை மாற்றியமைப்பது எனது எண்ணமல்ல, எனக்கு தோன்றிய, என் கண்ணில் பட்டதை இங்கே பதிவிடுகிறேன். சில நுட்பமான பிரத்தியேகமான வார்த்தை பிரயோகம் பற்றி மட்டுமே சில தேடல்களை மேற்கொள்வேனேயொழிய (உதராணமாக சென்ற பதிவில் மேடாயனம் என்ற வார்த்தை, ஆங்கிலத்தில் vernal equinox என்று தெரிந்ததால் தேடி இதை பிடித்தேன்), எங்கோ படித்ததை எழுதுவதில்லை. நண்பர் ஒருவர் ஒரு இணையதள இணைப்பை அனுப்பி 'இங்கே ஏற்கனவே இருக்கிறதே அதை தானே எழுதி இருந்தாய்?' என்றார், நான் புனிதவெள்ளி என்று அந்த பதிவை 2011ல் பதிவிட்டேன் அவர் அனுப்பிய இணைப்பு நேற்று முன்தினம் வந்திருந்த ஒன்று. அவர்கள் என் கருத்தை பதிவிட்டார்கள் என்றால் அது மூடத்தனம். சித்திரைத்திருநாள் மற்றும் ஈஸ்டர் காலம்காலமாக இருக்கிறது, என்னுடைய அந்த பார்வையும் பல ஆயிரம் மக்களின் எண்ணத்திலுதித்திருக்கலாம் ஆச்சிரியமல்ல. ஆனால் என் எழுத்துக்களின் வெற்றி என்று நான் கருதுவது அவரை கூகிள் செய்யவைத்தது மட்டுமே. ஏதேதோ எழுதலாம் ஆனால் அந்த கருத்துக்களை பகிர, படிப்பவர்களிடையே ஒரு தேடலை தூண்டுவதே மாபெரும் மனநிறைவையளிக்கிறது. எனது நண்பர்கூட்டம் முழுவதும் படிப்பாளிகளால் நிறைந்திருப்பது மிகவும் வியப்பளிக்கும், எனது மரியாதைக்குரியவர். ஆனால் எனக்கு ரொம்பவே சோம்பேறித்தனம், ரொம்ப எல்லாம் படிக்கமாட்டேன். கொஞ்சமாகத்தான் படிப்பேன், நிறைய சிந்தனை செய்வேன். அப்படி சிந்தித்த சில விஷயங்களை மக்களோடு பகிருவேன், சிலசமயம் எழுத முயற்சிப்பேன்.

என் சகோதரனுடன் உரையாடும்போது அவன் குறிப்பிட்டான் 'அம்மாவைப்போலவோ, உன்னைப்போலவோ நான் அவ்வளவெல்லாம் படிப்பதில்லை' என்று. அவன் கூறியதை சரிசெய்தேன். என் அன்னை எனது சிறுவயதில் கூறியதை நினைவுகூறினேன். அவரின் வாசிப்பு பழக்கம் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம். ஒரு வடை சுற்றிவந்த காகிதம் கூட அவர் கண்களை பிரகாசமடையவைக்கும். அம்மாவுக்கு சிறுவயது முதலே பிடித்தது ரேடியோப்பெட்டியும் புத்தகங்களும். எனக்கு அவர் கற்றுக்கொடுக்கநினைத்தது பல நல்ல விஷயங்கள், சுருக்கமாக குறிப்பிடவேண்டுமென்றால் 'நீ எந்த வேலை செய்கிறாய் என்பது முக்கியமில்லை, ஒரு கழிவறை சுத்தம்செய்யும் வேலை தான் உனக்கு கிடைத்ததென்றாலும் அதில் முழு ஈடுபாடோடு செய், அதில் சிறந்தவனென்று பெயரெடு. எந்தவேலையும் சிறிதென எண்ணாதே!' 'கண்டதை எல்லாம் படி, அறிவை விசாலப்படுத்து.'

வேலை விஷயத்தில் ஏதோ என்னாலான முழு ஈடுபாட்டுடன் செய்கிறேன். ஆராய்ச்சி தான் ரொம்பவே பிடித்துப்போனது. ஒரு பாலகன் போல ஒவ்வொருமுறையும் சவால்கள் நிறைந்த என் தொழில்முறை நாட்கள் எதிர்கொள்கிறேன். விக்கிரமாதித்தன்-வேதாளம் கதையாக தான் நீளும். அதைப்பற்றி ஒருநாள் விலாவாரியாக எழுதுகிறேன்.

அந்த நான் படிப்பாளியல்ல, எழுதுபவன். படிக்க நிறைய பொறுமை வேண்டும், எனக்கு கொஞ்ச நேரம் படித்தால் எண்ணக்குதிரைகள் எங்கோ என்னை இழுத்துச்சென்றுவிடும், அல்லது தூங்கிவிடுவேன். சிறுவயதில் நான் பத்திரிக்கை வாசிப்பில் ஈடுபடுத்திக்கொள்வதில் மிகுந்த ப்ரயத்தனப்படுத்திக்கொண்டேன் (சிரமப்படுத்திக்கொண்டேன்). ஆனந்த விகடன் தான் வீட்டில் வாங்குவோம். எனக்கு எழுத்துக்கூட்டி படிக்க மிகுந்த நேரமெடுக்கும் (ஆங்கில வழி கல்வியினால் வந்த பிரச்சனை, The Hindu ரொம்பவே கஷ்ட்டப்படுத்தும்). இந்த இரண்டு பத்திரிக்கைகளை படிப்பதில் எனக்கிருந்த பிரச்சனை மொழியோ நடையோ அல்ல என்றுணர்ந்தேன். 'இதை எல்லாம் படிச்சா நல்லதுன்னு சொல்லறீங்களே அம்மா, எனக்கு எதுவுமே புரியலையே?' என்பதே எனது குழப்பம். ரொம்ப சின்ன வயசு, சரி பொம்மை பார்ப்போம் என்று கார்ட்டூன்களை பார்ப்பேன் அப்புறம் புத்தகத்தை அம்மாவிடம் கொடுத்துவிடுவேன். அவ்வளவே. 'அப்படியே தலையங்கத்தையும் படிடானு' அம்மா சொல்ல கொஞ்சம் கொஞ்சமாக அதையும் படிக்க ஆரம்பித்தேன். தோராயமாக புரிந்தது, 'ஹாய் மதன்!' தான் அப்போ கார்ட்டூன் மற்றும் ஹாய் மதன் எழுதுவார். அப்படி தான் கேள்வி பதில்களை படிக்கவிளைந்தேன்.

என்னை மிகவும் கவர்ந்து முதல் புத்தகம் 'வந்தார்கள் வென்றார்கள்!'. புத்தகத்தை எடுத்து பிரித்ததுமுதல் ஓரிரு நாட்களில் படித்து முடித்தேன். அட்டை-டு-அட்டை என்று ஒரு புத்தகம் என்னால் கூட படிக்க முடிந்ததென்றால் அதற்க்கு மதனின் எழுத்துநடையும் என்னுளிருந்த வரலாறு பற்றிய ஆர்வமுமே காரணமாக புரிந்துகொண்டேன். அவ்வாறே வெகுவிரைவாக படித்து முடித்த ஆங்கில நாவல் 'Angels and Demons' வரலாறு சார்ந்த ஒரு நாவல். இப்படியாக படிப்பறிவு இருந்தும் வாசிப்பதை ஆரம்பிக்கதடுமாறிய என்னை நானே வலுக்கட்டாயமாக படிப்பை பழக்கிக்கொண்டேன்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால், எனக்கு படிக்க பிடிக்கவைத்ததுபோல எழுத்துநடையை இலகுவாக்கொள்வதினால் உள்ள அனுகூலம் பற்றியும், படிக்க தூண்டும்விதமான ஒரு கருத்துமிருந்தாலே ஒரு எழுத்தாளன் வளர முடியும் என்ற ஒரு கருத்தை விதையாகக்கொண்டே எழுத நினைத்தேன். அதுமட்டுமன்றி, யாஹூ சாட் (Yahoo! chat), ஆர்குட் (Orkut) என்ற சமூகவலைத்தளம் மூலமாக பல சிந்தனையாளர்களையும், பல்வேறுபட்ட சித்தாந்தம் மற்றும் நம்பிக்கை சார்ந்த மக்களுடன் என்னால் உரையாட முடிந்தது. 2001 முதல் 2012 வரை நேரில் சந்திக்காமல் ஆனால் மிகவும் நெருக்கமாக என் உடன்பிறவா அக்கா 'யாதுமானவள்' - லதா பூங்காவனம், நான் இந்த blog எழுத காரணமான ஒருவர். எனது science chat ல் மூலம் சேச்சி ஆனா காயத்ரி (2001 முதலானது எங்கள் நட்பு 2015 ல் என் மணவிழாவில் தான் முதலில் நேரில் பார்க்க வாய்ப்பே கிடைத்தது). பார்த்திரா ஒருவனின் திருமணத்திற்கு மும்பையில் இருந்து பறந்து வந்தார். சத்ய பிரியன் ஒரு நாஸ்தீகர், யாரையும் அதிகம் புண்படுத்தாமல் ஒரு கருத்தை புன்னைகையுடன் சொல்லும் ஒருவர் என நான் பலரை இவ்வாறே சந்தித்தேன்.

இப்படி தனிப்பட்டவர்களுக்கிடையேயான உரையாடல்கள் எனக்கு படிக்க இலகுவாக இருக்கும் சிந்திக்க வைக்கும். கொஞ்சம் introvert ஆக வாழ்க்கையை தொடங்கிய எனக்கு சிந்திக்க ரொம்ப பிடிக்கும். இவர் ஏன் இப்படி செய்கிறார், இதை ஏன் கொண்டாடுகின்றனர், இதே நாளில் வேறு வேறு இடத்தில் ஏன் இதை கொண்டாடுகிறார்கள் என்று நான் சிந்திப்பது என் தொப்பியை போட்டுக்கொண்டு யோசித்துப்பார்த்தால் தெரியும் இந்த கருத்துக்கள் தானாக வருவது ரொம்ப படிச்சோ காப்பியடிச்சோ வரவேண்டிய அவசியமல்ல. பதிவு ரொம்பவே பெருசாகிவிட்டதால் இங்கே நிறுத்துகிறேன். தொடரும்..

Friday, 14 April 2017

7 குதிரைகளின் மீதேறி பகலவனின் மேடாயனம் விஜயம்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும் சொல்லலாம். தமிழ் பேசி, படித்து, எழுதி, தமிழ் கலாச்சாரம் ஒன்றி வளர்ந்த தமிழனாக வெறுமனே புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று சொல்வதே உகந்ததென அவ்வாறே தெரிவிக்கிறேன்.

இவ்வாறாக வாழ்த்தியவுடனே தமிழறிஞர் பெருமக்கள் தைத்திருநாளே புத்தாண்டு என்று ஒரு கூற்றையும் முன்வைக்கின்றனர். இதில் எனக்கு சில முரண்பாடுங்கள் இருக்கின்றது, கலைஞர் கருணாநிதி கூறி தான் இது எனக்கு தெரியவந்தது, பல இலக்கியங்களை காட்டி இங்கேயெல்லாம் இவ்வாறு குறிப்பிறதென்றும்  என் நண்பர்கள் சுட்டிக்காட்டினர்.

நான் பள்ளியில் கற்றதும், எனது பெற்றோர் எனது நட்புவட்டம் என அனைவரும் பிறந்தது முதலே கொண்டாடி வந்தது வெகு சிலரால் மாற்றப்பதுவதில் தவறில்லை ஆனால் அதன்பின் இருக்கும் அர்த்தம் என்னைப்பொறுத்தவரையில் மிகவும் முக்கியம். சித்திரை வைகாசி என மனப்பாடம்செய்த மனதுக்கு தை மாசி என்று சொல்ல வரவில்லை.

சித்திரையை ஏன் கொண்டாடுகிறோம்? இதுவே வசந்தகாலம் பூத்துக்குலுங்கும் மரங்கள், எங்கும் பசுமை மைய்யம் கொள்ளும் இந்த காலமே 'உயிர்கள் துளிர்விடும்' காலம். இது இயற்கையான நிகழ்வு, ஒரு சுழற்ச்சி. துளிர்த்து வளர்ந்து உதிர்ந்தும் சற்று இளைப்பாறி மீண்டும் துளிர்க்கும் தாவரங்கள் மட்டுமில்லை. பூமி சுழல்வதால் சூரியக்கதிரின் வீரியமும் இப்போது தான் மீண்டெழும். அதனாலேயே தமிழறின்றி ஏனைய பலரும் இதை கொண்டாடுகின்றனர். அதாவது வடதுருவம் முதல் புவிமத்திய ரேகை வரை சார்ந்த நிலப்பகுதியில் வாழ்பவர்களுக்கு. ஆஸ்திரேலியர்களுக்கு இது இலையுதிர் காலம்.

பல்கலாச்சாரங்களில் கடவுள் படைத்ததாக கூறப்படும் இந்த உலகில் நிகழும் பல இயற்க்கை நிகழ்வுகளை பிரமித்து பார்த்து அவற்றில் 'இறை'ச்சாயம் அடித்து நான் காண்பதெல்லாம் இயற்க்கையின் நிகழ்வுகளின்றி வேறில்லை.

அவ்வாறே தைத்திருநாள், அறுவடைக்காலம் தான் நமக்கு புத்தாண்டு என்று உழவர் கொண்டாடுவதாக எடுத்துக்கொண்டாலும், அவை மனிதற்சார்ந்த, அறுவடை சார்ந்த ஒரு நிகழ்வு. வாழ்வாதராம் சம்படந்தப்பட்ட ஒரு பண்டிகை. ஆனால் உலகில் மனிதர்மட்டுமே வாழ்வதில்லையே, என்னை பொறுத்தவரை(யும்) சித்திரைத்திருநாளே புத்தாண்டு. சமஸ்கிருதத்தில் 60 வருடப்பெயர்கள் இருப்பதால் நாம் அதே நாளில் புத்தாண்டு கொண்டாட மாட்டோம் என்று சொல்வது பிதற்றல். பூமியும் சூரியனும் எந்த மொழியில் சொன்னாலும் வேறு ஆகப்போவதில்லை. மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்கவும், மனிதர்கள் ஏனைய உயிரினங்களிலிருந்து உயர்வாக பார்ப்பதும் தவறு. இயற்கையை ரசிக்கவும், வழிபடுவதும் வழிபடாததும் அவரவர் விருப்பம். வாழலாம், ரசிக்கலாம், 'வாழவிடலாம், வழிபடவிடலாம்' என்று கூற அதிகாரம் யாருக்குமில்லை. படித்தது போதும், சூரியன் மேடாயனம் (Vernal equinox மேஷ ராசி என்றும் அன்போடு அழைக்கலாம்) பிரவேசம் செய்கிறார், வெளியே போய் இயற்கையை ரசிக்கலாம்.