Saturday, 15 April 2017

படிக்க அதிகம் வராது ஆனா எழுத பிடிக்கும்

எழுத்துக்களுக்கு வரும் விமர்சனங்கள் மகிழ்ச்சியளிக்கிறது, நீங்கள் இதை படிப்பதும் கருத்து கூறுவதும், நான் செலவழிக்கும் நேரத்தை அர்த்தமுள்ளதாக்குகிறது. ஒரு நண்பர் கூறினார், 'உன் எழுத்துக்கள் புத்தாண்டு பற்றிய எனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வைத்தது, ஆனால் இதை பற்றி மேலும் படித்துவிட்டு திரும்ப பேசலாம், அதுவரை என் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளாமல் ஒத்திவைக்கிறேன்'.

வாசகர்கள் கண்ணோட்டத்தை மாற்றியமைப்பது எனது எண்ணமல்ல, எனக்கு தோன்றிய, என் கண்ணில் பட்டதை இங்கே பதிவிடுகிறேன். சில நுட்பமான பிரத்தியேகமான வார்த்தை பிரயோகம் பற்றி மட்டுமே சில தேடல்களை மேற்கொள்வேனேயொழிய (உதராணமாக சென்ற பதிவில் மேடாயனம் என்ற வார்த்தை, ஆங்கிலத்தில் vernal equinox என்று தெரிந்ததால் தேடி இதை பிடித்தேன்), எங்கோ படித்ததை எழுதுவதில்லை. நண்பர் ஒருவர் ஒரு இணையதள இணைப்பை அனுப்பி 'இங்கே ஏற்கனவே இருக்கிறதே அதை தானே எழுதி இருந்தாய்?' என்றார், நான் புனிதவெள்ளி என்று அந்த பதிவை 2011ல் பதிவிட்டேன் அவர் அனுப்பிய இணைப்பு நேற்று முன்தினம் வந்திருந்த ஒன்று. அவர்கள் என் கருத்தை பதிவிட்டார்கள் என்றால் அது மூடத்தனம். சித்திரைத்திருநாள் மற்றும் ஈஸ்டர் காலம்காலமாக இருக்கிறது, என்னுடைய அந்த பார்வையும் பல ஆயிரம் மக்களின் எண்ணத்திலுதித்திருக்கலாம் ஆச்சிரியமல்ல. ஆனால் என் எழுத்துக்களின் வெற்றி என்று நான் கருதுவது அவரை கூகிள் செய்யவைத்தது மட்டுமே. ஏதேதோ எழுதலாம் ஆனால் அந்த கருத்துக்களை பகிர, படிப்பவர்களிடையே ஒரு தேடலை தூண்டுவதே மாபெரும் மனநிறைவையளிக்கிறது. எனது நண்பர்கூட்டம் முழுவதும் படிப்பாளிகளால் நிறைந்திருப்பது மிகவும் வியப்பளிக்கும், எனது மரியாதைக்குரியவர். ஆனால் எனக்கு ரொம்பவே சோம்பேறித்தனம், ரொம்ப எல்லாம் படிக்கமாட்டேன். கொஞ்சமாகத்தான் படிப்பேன், நிறைய சிந்தனை செய்வேன். அப்படி சிந்தித்த சில விஷயங்களை மக்களோடு பகிருவேன், சிலசமயம் எழுத முயற்சிப்பேன்.

என் சகோதரனுடன் உரையாடும்போது அவன் குறிப்பிட்டான் 'அம்மாவைப்போலவோ, உன்னைப்போலவோ நான் அவ்வளவெல்லாம் படிப்பதில்லை' என்று. அவன் கூறியதை சரிசெய்தேன். என் அன்னை எனது சிறுவயதில் கூறியதை நினைவுகூறினேன். அவரின் வாசிப்பு பழக்கம் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம். ஒரு வடை சுற்றிவந்த காகிதம் கூட அவர் கண்களை பிரகாசமடையவைக்கும். அம்மாவுக்கு சிறுவயது முதலே பிடித்தது ரேடியோப்பெட்டியும் புத்தகங்களும். எனக்கு அவர் கற்றுக்கொடுக்கநினைத்தது பல நல்ல விஷயங்கள், சுருக்கமாக குறிப்பிடவேண்டுமென்றால் 'நீ எந்த வேலை செய்கிறாய் என்பது முக்கியமில்லை, ஒரு கழிவறை சுத்தம்செய்யும் வேலை தான் உனக்கு கிடைத்ததென்றாலும் அதில் முழு ஈடுபாடோடு செய், அதில் சிறந்தவனென்று பெயரெடு. எந்தவேலையும் சிறிதென எண்ணாதே!' 'கண்டதை எல்லாம் படி, அறிவை விசாலப்படுத்து.'

வேலை விஷயத்தில் ஏதோ என்னாலான முழு ஈடுபாட்டுடன் செய்கிறேன். ஆராய்ச்சி தான் ரொம்பவே பிடித்துப்போனது. ஒரு பாலகன் போல ஒவ்வொருமுறையும் சவால்கள் நிறைந்த என் தொழில்முறை நாட்கள் எதிர்கொள்கிறேன். விக்கிரமாதித்தன்-வேதாளம் கதையாக தான் நீளும். அதைப்பற்றி ஒருநாள் விலாவாரியாக எழுதுகிறேன்.

அந்த நான் படிப்பாளியல்ல, எழுதுபவன். படிக்க நிறைய பொறுமை வேண்டும், எனக்கு கொஞ்ச நேரம் படித்தால் எண்ணக்குதிரைகள் எங்கோ என்னை இழுத்துச்சென்றுவிடும், அல்லது தூங்கிவிடுவேன். சிறுவயதில் நான் பத்திரிக்கை வாசிப்பில் ஈடுபடுத்திக்கொள்வதில் மிகுந்த ப்ரயத்தனப்படுத்திக்கொண்டேன் (சிரமப்படுத்திக்கொண்டேன்). ஆனந்த விகடன் தான் வீட்டில் வாங்குவோம். எனக்கு எழுத்துக்கூட்டி படிக்க மிகுந்த நேரமெடுக்கும் (ஆங்கில வழி கல்வியினால் வந்த பிரச்சனை, The Hindu ரொம்பவே கஷ்ட்டப்படுத்தும்). இந்த இரண்டு பத்திரிக்கைகளை படிப்பதில் எனக்கிருந்த பிரச்சனை மொழியோ நடையோ அல்ல என்றுணர்ந்தேன். 'இதை எல்லாம் படிச்சா நல்லதுன்னு சொல்லறீங்களே அம்மா, எனக்கு எதுவுமே புரியலையே?' என்பதே எனது குழப்பம். ரொம்ப சின்ன வயசு, சரி பொம்மை பார்ப்போம் என்று கார்ட்டூன்களை பார்ப்பேன் அப்புறம் புத்தகத்தை அம்மாவிடம் கொடுத்துவிடுவேன். அவ்வளவே. 'அப்படியே தலையங்கத்தையும் படிடானு' அம்மா சொல்ல கொஞ்சம் கொஞ்சமாக அதையும் படிக்க ஆரம்பித்தேன். தோராயமாக புரிந்தது, 'ஹாய் மதன்!' தான் அப்போ கார்ட்டூன் மற்றும் ஹாய் மதன் எழுதுவார். அப்படி தான் கேள்வி பதில்களை படிக்கவிளைந்தேன்.

என்னை மிகவும் கவர்ந்து முதல் புத்தகம் 'வந்தார்கள் வென்றார்கள்!'. புத்தகத்தை எடுத்து பிரித்ததுமுதல் ஓரிரு நாட்களில் படித்து முடித்தேன். அட்டை-டு-அட்டை என்று ஒரு புத்தகம் என்னால் கூட படிக்க முடிந்ததென்றால் அதற்க்கு மதனின் எழுத்துநடையும் என்னுளிருந்த வரலாறு பற்றிய ஆர்வமுமே காரணமாக புரிந்துகொண்டேன். அவ்வாறே வெகுவிரைவாக படித்து முடித்த ஆங்கில நாவல் 'Angels and Demons' வரலாறு சார்ந்த ஒரு நாவல். இப்படியாக படிப்பறிவு இருந்தும் வாசிப்பதை ஆரம்பிக்கதடுமாறிய என்னை நானே வலுக்கட்டாயமாக படிப்பை பழக்கிக்கொண்டேன்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால், எனக்கு படிக்க பிடிக்கவைத்ததுபோல எழுத்துநடையை இலகுவாக்கொள்வதினால் உள்ள அனுகூலம் பற்றியும், படிக்க தூண்டும்விதமான ஒரு கருத்துமிருந்தாலே ஒரு எழுத்தாளன் வளர முடியும் என்ற ஒரு கருத்தை விதையாகக்கொண்டே எழுத நினைத்தேன். அதுமட்டுமன்றி, யாஹூ சாட் (Yahoo! chat), ஆர்குட் (Orkut) என்ற சமூகவலைத்தளம் மூலமாக பல சிந்தனையாளர்களையும், பல்வேறுபட்ட சித்தாந்தம் மற்றும் நம்பிக்கை சார்ந்த மக்களுடன் என்னால் உரையாட முடிந்தது. 2001 முதல் 2012 வரை நேரில் சந்திக்காமல் ஆனால் மிகவும் நெருக்கமாக என் உடன்பிறவா அக்கா 'யாதுமானவள்' - லதா பூங்காவனம், நான் இந்த blog எழுத காரணமான ஒருவர். எனது science chat ல் மூலம் சேச்சி ஆனா காயத்ரி (2001 முதலானது எங்கள் நட்பு 2015 ல் என் மணவிழாவில் தான் முதலில் நேரில் பார்க்க வாய்ப்பே கிடைத்தது). பார்த்திரா ஒருவனின் திருமணத்திற்கு மும்பையில் இருந்து பறந்து வந்தார். சத்ய பிரியன் ஒரு நாஸ்தீகர், யாரையும் அதிகம் புண்படுத்தாமல் ஒரு கருத்தை புன்னைகையுடன் சொல்லும் ஒருவர் என நான் பலரை இவ்வாறே சந்தித்தேன்.

இப்படி தனிப்பட்டவர்களுக்கிடையேயான உரையாடல்கள் எனக்கு படிக்க இலகுவாக இருக்கும் சிந்திக்க வைக்கும். கொஞ்சம் introvert ஆக வாழ்க்கையை தொடங்கிய எனக்கு சிந்திக்க ரொம்ப பிடிக்கும். இவர் ஏன் இப்படி செய்கிறார், இதை ஏன் கொண்டாடுகின்றனர், இதே நாளில் வேறு வேறு இடத்தில் ஏன் இதை கொண்டாடுகிறார்கள் என்று நான் சிந்திப்பது என் தொப்பியை போட்டுக்கொண்டு யோசித்துப்பார்த்தால் தெரியும் இந்த கருத்துக்கள் தானாக வருவது ரொம்ப படிச்சோ காப்பியடிச்சோ வரவேண்டிய அவசியமல்ல. பதிவு ரொம்பவே பெருசாகிவிட்டதால் இங்கே நிறுத்துகிறேன். தொடரும்..

No comments:

Post a Comment