Tuesday, 26 July 2016

அல்ஸைமர்-அகஸ்டே டெடர்

அலோய்சிஸ் அல்ஸைமர் இவரின் பெயரில் தான் அல்ஸைமர் நோய் என்று அழைக்கப்படுகிறது. ஜூன் மாதம் 14 ஆம் தேதி 1864 ஆம் ஆண்டு, மார்க்ட்பிரைட் என்ற ஜெர்மானிய/பவேரிய கிராமத்தில் பிறந்தார் ஆலோயிஸ் அல்ஸைமர். அஷாஃப்பன்பெர்க் என்ற ஊரில் பள்ளிப்படிப்பை முடித்தவர் பின்ன பெர்லின், ட்யூபின்கன், ஊர்ட்ஸ்பூர்க் ஆகிய இடங்களில் தனது மருத்துவப்படிப்பை தொடர்ந்தார். இறுதியாக தனது 'செவிக்குறும்பை சுரப்பி' பற்றிய மருத்துவ ஆய்வறிக்கையை 1887ல் சமர்ப்பித்தார். பின்னர் 1888ல் ஃபிரான்க்புர்ட் நகரில் ''மனநலம் மற்றும் வலிப்பு நகராட்சி மருத்துவமனையில்" இளைய மருத்துவரிடம் உதவியாளராக பணியாற்றினார். இங்கே மனித மூளை பற்றிய ஆய்வில் அவருக்கு ஆர்வம் வரத்துவங்கியது. 1895ல் மூத்தமருத்துவராக பதவிஉயர்வு பெற்று, 1902ல் அவர் எமில் க்ரேப்பெலின் என்பவரது தலைமையில் ஹைடல்பெர்க் நகரில் சிறிதுகாலம் பணியாற்றி பின்னர் அவர்கள் குழுவாக ம்யூன்ஷென் (ம்யூனிக்) நகரத்தில் பணியாற்றினர். ம்யூன்ஷெனில் மூலக்கூறுவியல் அவைக்கூடத்தலைவரானார் அல்ஸைமர். 1904ல் தனது ஹாபிலிடேஷன் (லத்தீன் : 'ஹாபிலிஸ்' என்ற வார்த்தையிலிருந்து வந்த சொல் ''பொருத்தம், சரியான, திறமையான'' என்று பொருள்படும் முது-முனைவர் தகுதி) பெற்றார். 

இதனிடையே, அல்ஸைமர் என்ற பெயரை உலகமுழுவதும் அறியவைக்கப்போகும் 'அகஸ்டே டெடர்' என்ற பெண்மணி நவம்பர் 25, 1901ல் ஃபிரான்க்புர்ட் நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், அல்ஸைமர் அவரை மருத்துவசோதனை செய்கிறார். பணியிடமாற்றம் செய்தாலும் அல்ஸைமர் அகஸ்டே டெடர் நிலைகுறித்து தொடர்ந்து கவனித்துவந்தார், அகஸ்டே இறக்கும்வரை (8 ஏப்ரல் 1906), பின்னர் அவரின் மூளையை ஆய்விற்குட்ப்படுத்தி நோய்க்கான காரணத்தை கண்டறிய முனைந்தார். யார் அவர்.. அவருக்கு என்ன பிரச்சனை?
அகஸ்டே டெடர் 1902, ஃபிரான்க்புர்ட்
அல்ஸைமர் அகஸ்டே டெடர் பற்றி எழுதிய குறிப்புகள் இன்றும் பத்திரமாக உள்ளன. முதலில் அவர் எடுத்த குறிப்புகள் நவம்பர் 26, 1901,  அதைற்தொடர்ந்து 28, 29, 30 வரை கையெழுத்து பிரதியை இருக்கிறது அந்த கோப்பு. இன்றளவும் மருத்துவர்கள் ஒருவருக்கு அல்ஸைமர் நோய்தாக்கியுள்ளதா என்றறிய கேட்கப்படும் கேள்விகளும் அவர் அன்று கேட்டதே என்றால் நம்பமுடிகிறதா? அந்த கோப்பில் இப்படி தான் இருக்கிறது, நம் வசதிக்காக அதை மொழிமாற்றம் செய்து இங்கே உங்கள் பார்வைக்கு:

நவம்பர் 26, 1901
அகஸ்டே டி (அகஸ்டே டெடர் ஐ இப்படி தான் எழுதி வைக்கிறார்), தன படுக்கையின்மேல் நிலைக்குத்திய பார்வையுடன் அமர்ந்திருக்கிறார்.

அல்ஸைமர்                                        அகஸ்டே டெடர்
உங்கள் பெயர் என்ன?                    -- அகஸ்டே 
குடும்பப்பெயர்?                               -- அகஸ்டே 
தங்கள் கணவர் பெயர்?                  -- அகஸ்டே, என்று தான் நினைக்கிறேன் 
உங்கள் கணவர்?                            -- ஓ ஹோ.. (ஒன்றும் புரியாதவர் போல விழிக்கிறார்)
தங்கள் வயது?                                --  51 
நீங்கள் எங்கே வசிக்கிறீர்களா?     -- ஓஹ், நீங்க எங்களோட ஏற்கனவே இருக்கீங்களா 
உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா? --  ஆஹ், எனக்கு ஒரே குழப்பமா இருக்கு 
நீங்க இங்கே எப்படி(வந்தீர்கள்)?    -- இங்கே, எல்லா இடத்திலும், இப்போ, இங்கே. 
                                                            என்னை தப்பா நினைக்காதீங்க.
எவ்வளவு நானா இங்க இருக்கீங்க ? -- (யோசிக்கிறார்) 3 வாரங்களாய் 
இது என்ன (பென்சில் காண்பித்தேன்) --  ஒரு பேனா 
பின்னர் ஒரு பர்ஸ், சாவி, நாட்குறிப்பு, சுருட்டு என எல்லாவற்றையும் தெளிவாய் சுட்டிக்காட்டினார். 
மதியஉணவிற்கு காளிஃப்ளவர் மற்றும் பன்றிக்கறி சாப்பிடுகிறார், கேட்டதற்கு பசலைக்கீரை என்கிறார். 

இப்படி இவர்களுக்கிடையே கேள்வி பதில்களை குறிப்பெடுக்கிறார். அதில் அகஸ்டே டெடர் கூறிய ஒரு வாக்கியம் மிகவும் பிரசித்தம், அல்ஸைமர் நோயை உணர்த்தும் ஒரு வாக்கியமாகவே தென்படுகிறது.
''Ich habe mich sozusagen verloren'' ''சொல்லவேண்டுமென்றால், நான் என்னை இழந்துவிட்டேன்''


தொடரும்..

No comments:

Post a Comment